Take a fresh look at your lifestyle.

’மண்டாடி’ திரைப்பட விமர்சனம்

27

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்படும் பாய்மரப் படகுப் பந்தயத்தில் முகவைப்பட்டினம் மீனவ கிராமம் சார்பில் பங்கேற்கும் அணியை தன்வசம் வைத்திருக்கும் சுஹாசின் மகனை, இளைஞர் மிதுன் கொலை செய்ய முயற்சிக்கிறார். அது தோல்வியில் முடிய, மிதுனை சுஹாஸின் ஆட்கள் கொலை வெறியோடு துரத்துகிறார்கள். அங்கிருந்து தப்பிச் செல்லும் மிதுன், 20 வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு வெளியேறி சென்னையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சூரியிடம் தஞ்சம் அடைகிறார். விசயத்தை அறிந்துக் கொண்ட சூரி, மிதுனுக்கு அடைக்கலம் கொடுக்க, அங்கேயும் சுஹாஸின் ஆட்கள் மிதுனை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

இதனால் மிதுனை அழைத்துக் கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்புகிறார் சூரி. 20 வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு சென்ற சூரி, மீண்டும் தன் கிராமத்திற்குள் நுழையும் போது அவரது பழைய பகைமை தலைதூக்குகிறது. தன் பழைய பகைமை ஒருபுறம் இருக்க மறுபுறம் முகவைப்பட்டினம் இளைஞர்களை திரட்டி புதிய அணியை உருவாக்கும் சூரி, அதன் மூலம் பாய்மரப் படகுப் பந்தயத்தில் வெற்றி பெற்று முகவை அணியில் உள்ளூர் போட்டியாளர்களை பங்கேற்க வைக்க முடிவு செய்கிறார். சூரியின் முயற்சியை தடுப்பதோடு, அவரை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்று சுஹாஸ் திட்டம் போடுகிறார். இதில் யார் வெற்றி பெற்றது ? , சூரி ஊரை விட்டு செல்ல என்ன காரணம் ?, சூரி – சுஹாஸ் பகைமையின் பின்னணி என்ன ? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘மண்டாடி’.

தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்வியலை மையமாக கொண்ட பல படங்கள் வெளியாகியிருந்தாலும், அவற்றின் வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு, புதிய கோணத்தில் மீனவர்களின் வாழ்வியலை கதையாக்கி, திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத்தை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்து, பார்வையாளர்களுக்கு புதிய திரை அனுபவத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, கதைக்களமாக கடல் மற்றும் கரையை கையாண்ட விதம் கைதட்டல் பெறுகிறது.

முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி, மாஸ் நாயகனுக்கான அத்தனை தகுதிகளும் தன்னிடம் இருக்கிறது என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் மிரட்டியிருக்கும் சூரி, பண்பட்ட நடிப்போடு, கடுமையான உழைப்பின் மூலமாகவும் வியக்க வைத்திருக்கிறார். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன், அமைதியான காதல் காட்சிகள் மற்றும் கலங்கடிக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் என படம் முழுவதும் மண்டாடி என்ற கடலோடியாக வாழ்ந்திருக்கிறார்.

சூரிக்கு இணையான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் சுஹாஸ், சாட்டப்புலி என்ற கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. சூரியுடன் நட்பு பாராட்டும் போதும், பகைமையோடு வலம் வரும் போதும், மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டியிருப்பவர், தன் பார்வைகளின் மூலமாகவே தன் பகை உணர்வை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார் அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார். காதலையும், காதல் முறிவையும் பெண்கள் எளிதாக கடந்துபோகும் மனநிலையை தனது நடிப்பில் நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார்.

மச்சமுனி என்ற கதாபாத்திரத்தில் மூத்த மண்டாடியாக நடித்திருக்கும் சத்யராஜ், மாஸான கதாபாத்திரத்தில் கிளாசாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.

மாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர், ஆரம்பக் காட்சியில் அதிரடியாக அறிமுகமாகி கவனம் ஈர்ப்பதோடு, தன் அம்மா தான் சூரியின் முன்னாள் காதலி என்று தெரிந்த பிறகு அவர் சூரியை எதிர்கொள்ளும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைத்தாலும், எதிர்பார்க்காத ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறும் தன் மனநிலையை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சூரியின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன், சாதாரண வசனங்களை கூட டைமிங்கோடு பேசி சிரிக்க வைக்கிறார். இறுக்கமான சூழல்களை தனது திரை இருப்பு மற்றும் வசன உச்சரிப்பால் இலகுவாக மாற்றியிருக்கும் பாலசரவணன் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி.

மகிமா நம்பியாரின் கணவராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய், சுஹாஸின் தந்தையாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சிவா, சூரியின் நண்பராக நடித்திருக்கும் ராம்ஸ், சுஹாசின் மச்சானாக நடித்திருக்கும் பத்மன், ஆடுகளம் முருகதாஸ், சுஹாசின் மகனாக நடித்திருக்கும் கிரிஷ் ஹாசன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் கடல் பயணம் மற்றும் கதாபாத்திரங்களின் பயணம் இரண்டையும் காட்சிப்படுத்திய விதம் மிரட்டல். கடலில் நடக்கும் பாய்மரப் படகுப் பந்தயம் மற்றும் கரையில் நடக்கும் ஆக்ரோஷமான மோதல்கள் இரண்டையுமே மெய்சிலிரிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பாய்மரப் படகு பந்தயத்தை வெவ்வேறு விதமாக காட்சிப்படுத்தினாலும், அதில் இருக்கும் ஆபத்து, அந்த ஆபத்தையும் மீறிய வீரர்களின் சாகசங்களை நம் கண்முன் நிறுத்திய நடிகர்களின் உடல்மொழியை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி பந்தயத்தை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் இருந்தாலும் மனதில் நிற்கவில்லை. இருந்தாலும், பந்தயக் காட்சிகளுக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை வசனமே இல்லாத காட்சிகளில் கூட நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஈ.ராகவுக்கு விருது நிச்சயம். கதை சொல்லிய விதம், சண்டைக்காட்சிகளை தொகுத்த முறை மற்றும் பந்தயக் காட்சியை பயணிக்க வைத்த விதம் ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களின் கவனத்தை திரையின் பக்கம் ஈர்க்கும் விதமாக காட்சிகளை தொகுத்திருக்கும் ராகவ், இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் பயணிக்க வைத்திருக்கிறார்.

பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ என்று மூன்று சண்டைப்பயிற்சியாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். மூவரது பணியும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பந்தயக் காட்சியை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.

கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரண், இயற்கை எது, செயற்கை எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு தனது பணியை செய்திருக்கிறார்.

அமீர் ஜமால் கான் மற்றும் மதிமாறன் புகழேந்தி ஆகியோரது வசனங்கள் எளிமையாக இருந்தாலும் கூர்மையாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் மதிமாறன் புகழேந்தி, இதுவரை திரையில் சொல்லப்படாத மீனவர்களின் வாழ்வியலை, பிரமிக்க வைக்கும் காட்சி மொழியில் மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார். நாயகன் சூரியை மாஸாக காட்டினாலும், அவரை சுற்றி பயணிக்கும் கதாபாத்திரங்களும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும்படி காட்சிகளை வடிவமைத்திருப்பவர், சிறு சிறு கதாபாத்திரங்களை கூட கவனம் ஈர்க்கும்படி பயணிக்க வைத்திருக்கிறார்.

துரோகத்தால் பகைவர்களாகும் நண்பர்கள், காதல் மற்றும் பிரிவு போன்றவை வழக்கமான கதையாக தெரிந்தாலும், அதற்கான காட்சியமைப்புகள் மற்றும் மீனவர்களின் வாழ்வியலை புதிய கோணத்தில் கையாண்டது மற்றும் பாய்மரப் படகுப் பந்தயத்தை காட்சிப்படுத்திய விதம், இது வழக்கமான படம் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் என தொழில்நுட்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பும், அந்த உழைப்பை துளி கூட வீணடிக்காமல் திரைக்கதையில் சரியான முறையில், சரியான அளவில் பயன்படுத்தி, காற்றையும், நீரின் பயணத்தையும் சரியாக கணித்து பாய்மரப் படகை செலுத்தும் வீரர் போல் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி படத்தை நகர்த்தி, பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘மண்டாடி’ மெய்சிலிர்க்க வைக்கும் கடல் சாகசம்.

ரேட்டிங் 4.5/5