பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் உளவாளி ஒருவரை ரா சிறப்பு குழு தேடுகிறது. அவர்களுக்கு முன்பாக அவரை பிடித்து மேலதிகாரியிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க கார்த்தி முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு முன்பாக சர்வதேச கூலிப்படை கும்பலால் அந்த உளவாளி கொலை செய்யப்படுவதோடு, அவரிடம் இருக்கும் ரகசியம் ஒன்றை கைப்பற்ற முயற்சிக்கிறது. இறப்பதற்கு முன்பு அந்த உளவாளியிடம் இருந்த ரகசியத்தை பெறும் கார்த்தி, அவர் மூலம் தனது தந்தை உயிருடன் இருப்பதையும் அறிந்துக் கொள்கிறார்.
உயிருடன் இருக்கும் தந்தையை தேடி செல்லும் கார்த்தி, இறந்த உளவாளி கொடுத்த ரகசிய பொருள் போல் மேலும் இரண்டு உளவாளிகள் மூலம் இரண்டு ரகசியங்கள் பாதுகாத்து வைக்கபப்ட்டிருப்பதும், அந்த மூன்றையும் கைப்பற்ற முயற்சிக்கும் சர்வதேச கூலிப்படை தலைவன் எஸ்.ஜே.சூர்யா, அதன் மூலம் நாட்டையே அழிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதையும் தெரிந்துக் கொள்கிறார். கூலிப்படை தலைவனுக்கு முன்பாக அந்த ரகசியத்தை கைப்பற்றி, அதன் பின்னணி என்ன ? என்பதை அறிந்துக் கொள்ள முயற்சிக்கும் கார்த்தி, அந்த இடத்தில் தனது தந்தையை மீண்டும் சந்திக்கிறார். மகனும், தந்தையும் இணைந்து நாட்டை அழிக்கும் நாசவேலையை முறியடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அது என்ன ?, அதை எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள் ?, நாட்டை அழிக்க துடிக்கும் எஸ்.ஜே.சூர்யா யார் ?, என்பதை அதிரடி சாகச காட்சிகளுடன் ஹாலிவுட் ஆக்ஷன் பட பாணியில் சொல்வதே ‘சர்தார் 2’.
‘சர்தார்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், வேறு ஒரு பிரச்சனையோடு மக்களை எச்சரித்திருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், எதிர்காலத்தில் இப்படியும் ஒரு பேரழிவு ஏற்படலாம், என்ற கற்பனையை சாகசங்கள் நிறைந்த உளவாளியின் வாழ்க்கை பின்னணியில் பிரமாண்டமாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார்.
அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார். வெள்ளந்தியான நபர், ஆனால் வேலைன்னு வந்துட்டா உயிரை துச்சமாக நினைத்து மக்களை காக்கும் பணியை திறம்பட செய்யும் சூப்பர் உளவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் சாகசம் நிறைந்த காட்சிகளை நம்பும்படி கையாண்டிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவு என்றாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், விமான சாகசங்களிலும் கார்த்தியின் உற்சாகமான நடிப்பு ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.
சர்வதேச கூலிப்படை தலைவன் ரெட் டேகன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கமான நடிப்பாக இருந்தாலும், திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார். வில்லனாக இருந்தாலும் மக்கள் செய்யும் தவறுகள், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் நீளமான காட்சியை தனது திரை இருப்பு மற்றும் நடிப்பு மூலம் தொய்வில்லாமல் கடத்தியிருக்கிறார்.
சிறிய வேடம் என்றாலும் ஆக்ஷனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் மாளவிகா மோகனன், படம் முழுவதும் பயணித்தாலும் ஆஷிகா ரங்கநாத்தின் வேடம் மனதில் நிற்கவில்லை. ஒரு காட்சியில் தலைகாட்டி மறைகிறார் ரஜிஷா விஜயன்.
யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவியின் புதிய காமெடி கூட்டணியின் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், வில்லன் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் கதையை கேட்டு கொடுக்கும் இவர்களது ரியாக்ஷன் திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கும்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றாலும் அது தெரியாதவாறு காட்சியை கையாண்டிருக்கிறார்.
சாம்.சி.எஸ்-ன் இசை படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. சேசிங் மற்றும் சாகச காட்சிகள், ஜேம்ஸ் பாண்ட் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை அளவாக பயணித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலமே விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு தான். நாயகன் இரண்டு வேடம், வில்லன் எஸ்.ஜே.சூர்யா, மக்களை காப்பாற்ற உளவாளிகள் மேற்கொள்ளும் ஜப்பான் திட்டம், ரா அமைப்பின் பிளாஷ்பேக் காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் இருந்தாலும், அவை அனைத்தையும் சரியான முறையில் தொகுத்து படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார். குறிப்பாக சாகச காட்சிகளை நம்பும்படியும், திரைக்கதையின் விறுவிறுப்பு குறையாமலும் கதையை நகர்த்தியிருக்கும் விஜய் வேலுகுட்டி, 3 மணி நேரம் எப்படி போனது என்று தெரியாதவாறு தன் படத்தொகுப்பு பணியை நேர்த்தியாக செய்திருக்கிறார்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், மீண்டும் ஒரு சமூகப் பிரச்சனையை அழுத்தமாக பேசியிருந்தாலும், அதை பிரச்சாரமாக கையாளாமல், ஆக்ஷன் மற்றும் சாகசம் நிறைந்த காட்சியாக கொடுத்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்திருக்கிறார்.
மக்கள் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்து, அது குறித்த விளக்கத்தை வில்லன் கதாபாத்திரம் மூலம் விவரித்தாலும், அந்த காட்சியை நகைச்சுவையாகவும் கையாண்டு படத்தை தொய்வின்றி நகர்த்தி செல்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன ? என்ற எதிர்பார்ப்போடு பார்வையாளர்களை படம் பார்க்க வைத்திருப்பவர், சர்தார் மூலம் மீண்டும் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘சர்தார் 2’ ஜெயிப்பார்.
ரேட்டிங் 3.9/5