Take a fresh look at your lifestyle.

என் கதாபாத்திரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ் நிச்சயம் இருக்கும் – ’சிக்னல் அட் 11.30’ படம் பற்றி நடிகர் சந்தோஷ் பிரதாப்

39

‘திருவாளர் பஞ்சாங்கம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மலர்விழி நடேசனின் இரண்டாவது படம் ’சிக்னல் அட் 11.30’. இதில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்க, நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மலர்விழி நடேசன் கதை எழுதி இயக்கி ஏசர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக டாக்டர்.சிவானி சுப்பிரமணி பணியாற்றுகிறார். டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். ஷெரிப் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

இயக்குநர் மலர்விழி நடேசன் படம் மற்றும் தனது இயக்குநர் பயணம் பற்றி கூறுகையில், “நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. நான் பள்ளி ஒன்று நடத்தி வருகிறேன், ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். பள்ளி நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கான கதை எழுதுவது, அவர்களுக்கான வசனம் மற்றும் உடை வடிவமைப்பு, நடிப்பு பயிற்சி கொடுப்பது ஆகியவற்றின் மூலம் எனக்கு திரைப்படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்படி தான் இயக்குநராக வேண்டும் என்று விரும்பினேன். ‘திருவாளர் பஞ்சாங்கம்’ படம் என் முதல் படம், ‘சிக்னல் அட் 11.30’ என் இரண்டாவது படம்.

11.30 மணியளவில் ஒருவரது வாழ்வில் நடக்கும் சம்பவம் தான் இந்த படத்தின் கதை. தனிப்பட்ட நபரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை எந்த அளவுக்கு புரட்டிப்போடுகிறது, என்பதை தான் படம் பேசுகிறது. நான் காரில் பயணித்த போது, சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த போது தான் எனக்கு இந்த கதைக்கரு தோன்றியது. அதனால் தான், அதையே தலைப்பாக வைத்து விட்டேன். படத்தில் நீங்கள் எதிர்பார்த்த விசயங்களும், எதிர்பார்க்காத விசயங்களும் இருக்கும். ரொமாண்டிக் திரில்லர் ஜானர் படமாகவும் இருக்கும்.

இந்த படத்திற்கான அன்பான மற்று முரட்டுத்தனம் அதே சமயம், ஹான்ஸமாக இருப்பவரை தான் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி, எங்கள் குழுவினர் ஆலோசித்து தேடிய போது சந்தோஷ் பிரதாப் கிடைத்தார். அவரை பார்த்ததும் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார், என்று தோன்றியது. அவரிடம் பேசிய போதும் சரியாக இருந்ததால் அவரை ஹீரோவாக்கி விட்டோம். பவ்யா ட்ரிகாவும் அப்படித்தான், எங்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருந்தார். மற்றொரு நாயகி கதாபாத்திரத்திற்கான தேர்வில் தான் கொஞ்சம் சிரமப்பட்டேன், பிறகு பூஜிதாவை ஒப்பந்தம் செய்தோம்.

படம் முழுவதுமாக முடிவடைந்து விட்டது. தற்போது பின்னணி வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறோம். அதன் பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்.” என்றார்.

நாயகன் சந்தோஷ் பிரதாப் படம் குறித்து கூறுகையில், “சுமார் 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன், 12 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறேன், பல அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு என்று சினிமா மீது தனி பேஷன் இருக்கிறது. அப்படித்தான் இயக்குநருக்கும். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. நான் கதையில் அல்லது காட்சிகளில் என்னுடைய யோசனையை சொல்லும் போது, அதை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். நான் இதுவரை நடித்த படங்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானதாக இருக்கும். அப்படித்தான் இந்த படமும் இருக்கும்.

என் கதாபாத்திரம் நெகட்டிவ் ஷேட் கொண்டதாக இருக்குமா ? என்றால் அது தான் படத்தின் சஸ்பென்ஸ். இப்படிப்பட்ட வேடங்களில் நான் தொடர்ந்து நடிக்க காரணம், மற்றவர்கள் இந்த மாதிரி வேடங்களில் நடிக்க மறுப்பதால் தான் என்னை தேடி இப்படிப்பட்ட வேடங்கள் வருகிறது. ஆனால், கதாபாத்திரமாக வித்தியாசமாக இருப்பதால் இப்படிப்பட்ட வேடங்களில் நடிக்கிறேன், இந்த படத்தின் கதாபாத்திரத்திலும் நீங்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ் இருக்கும்.” என்றார்.

நடிகை பவ்யா ட்ரிகா கூறுகையில், “வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பாக இந்த படத்தை பார்க்கிறேன். எனது கதாபாத்திரம் சஸ்பென்ஸ் நிறைந்தவையாக இருக்கும். இந்த படத்திற்காக நான் ஸ்கூட்டர் ஓட்ட பழகினேன். நிஜத்தில் என்னை ஸ்கூட்டல் ஓட்ட என் அம்மா அனுமதிப்பதில்லை. ஆனால், இந்த படத்திற்காக வேகமாக ஸ்கூட்டர் ஓட்டினேன்.” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர்.சிவாணி சுப்பிரமணி கூறுகையில், “நான் ஜெர்மனியில் படித்து வருகிறேன். விடுமுறைக்காக வந்த போது என் அம்மா நேராக படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு தான் அவர் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார், என்பது தெரிய வந்தது. அவரது ஆர்வம் மற்றும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக தான் தயாரிப்பு பணியை கவனிக்க முடிவு செய்தேன். திரைப்பட தயாரிப்பு புதிய அனுபவமாக இருந்தது.” என்றார்.

கதைக்கும் 11.30 நேரத்திற்கு இருக்கும் தொடர்பு மற்றும் இரவா அல்லது பகலா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் மலர்விழி, “இரவு அல்லது பகல் என்பதை கூட நான் குறிப்பிடாதற்கு, அதுவும் படத்தின் சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்று தான், எனவே அது நீங்கள் படம் பார்க்கும் போது தான் தெரியும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறு சம்பவம், அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, அதனால் என்னவெல்லாம் நடக்கிறது, என்பது தான் கதை. அதை சஸ்பென்ஸாக சொல்லியிருக்கிறோம். நாம் அனைவரும் கடந்து செல்லும் ஒரு சம்பவம் தான், அனைவரது வாழ்விலும் நடந்திருக்கலாம். அப்படி நடந்தால், அதன் மூலம் என்னவெல்லாம் நடக்கும், என்பதை கற்பனையாக சொல்லியிருக்கிறேன்.

சிக்னலில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமாக இருந்தது. குறிப்பிட்ட சிக்னலில் படப்பிடிப்பு நடத்தும் போது, ஒவ்வொரு முறையும் எதாவது பிரச்சனை வரும். அதை சமாளித்து அந்த காட்சியை படமாக்கியிருக்கிறோம். சிக்னல் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, ஒரு கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கும்.” என்றார்.