72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ’கேப்டன் மில்லர்’ படத்திற்காக சிறப்பு நடிப்பு விருது மற்றும் ‘ராயன்’ படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இயக்குநராக என தனுஷ் இரண்டு தேசிய விருதுகள் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் இதுவரை பல்வேறு பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
72-வது தேசிய திரைப்பட விருதுகள் 2026 ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்டன. 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்த விருதுகளில், தமிழ்த் திரைப்படத் துறை மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கமல்ஹாசன் தயாரித்து, சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது ராஜ்குமார் பெரியசாமிக்கு கிடைத்துள்ளது. அப்படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் சிறந்த படத்தொகுப்பு விருது வென்றுள்ளார். சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு விருது அறிவிகிகப்பட்டுள்ளது.
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த சண்டைப் பயிற்சிக்காக அனல் அரசுக்கும், சிறந்த துணை நடிகைக்காக சச்சனா நமிதாஸுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு நடிப்பு பாராட்டு (Special Mention) பிரிவில் நாயகன் தனுஷுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற தேசிய விருதைப் பெற்றது.
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த, சி. பிரேம் குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ திரைப்படம் சிறந்த ஒலிக்கலவை (Best Sound Mixing) விருதைப் பெற்றது.
தமிழ் குறும்படமான ‘ப்ளூ’ திரைப்படத்திற்கு, டி. எஸ். ஹரி ஹர சுதன் சிறந்த ஒலி வடிவமைப்பு (Best Sound Design) தேசிய விருதைப் பெற்றார்.
நடிகர் தனுஷ், பல்வேறு பிரிவுகளில் 5 வது முறையாக தேசிய விருது வென்றுள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2011 ஆம் ஆண்டு ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றவர், தயாரிப்பாளராக ‘விசாரணை’ படத்திற்காக சிறந்த தமிழ்ப் படத்திற்காக தேசிய விருதை 2016 ஆம் ஆண்டு வென்றார்.
மேலும், 2020 ஆம் ஆண்டு ‘அசுரன்’ படத்திற்காக மீண்டும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றவர், தற்போது 2026 ஆம் ஆண்டு ‘ராயன்’ படத்திற்காக இயக்குநராகவும், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக நடிகராகவும் விருது வென்றுள்ளார்.