காதல் தோல்வியால் சோகமான மனநிலையுடன், விரக்தியோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸை அதிதி சங்கர் காதலிக்கிறார். முதலில் காதலை ஏற்க மறுத்தாலும் அதிதியின் தீவிர முயற்சியினால் அர்ஜுன் தாஸ் மனம் மாறி, காதலிக்க தொடங்குகிறார். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. நிச்சயதார்த்தத்தின் போது அர்ஜுன் தாஸின் முன்னாள் காதலி சோனா ஒலிக்கல் போன் செய்து சந்திக்க வேண்டும், என்று சொல்கிறார். 8 வருடங்களுக்குப் பிறகு தொடர்பு கொள்ளும் முன்னாள் காதலியை சந்திக்கும் அர்ஜுன் தாஸ், குழப்பமான மனநிலைக்கு செல்வதோடு, தன்னை பிரிந்து சென்றதற்கான காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைகிறார். அதன் பிறகு என்ன ஆனது ? என்பதே ‘ஒன்ஸ்மோர்’.
அர்ஜுன் தாஸ், வழக்கம் போல் இறுக்கமான முகத்தோடு வலம் வருவதோடு, சிரிக்க மறந்தவராக சோகமான முகத்தோடு நடித்திருக்கிறார். முதல் பாதியில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப விரக்தியுடன் காணப்படும் அர்ஜுன் தாஸ், இரண்டாம் பாதியில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தாலும், அங்கேயும் அவர் முகத்தில் அமைதியும், சோகமும் தான் தாண்டவமாடுகிறது.
நாயகி அதிதி சங்கர் தனது துடிப்பான நடிப்பு மூலம் படத்தை சற்று தாங்கிப் பிடித்திருக்கிறார். நிராகரிப்புகளை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டு நாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டிருக்கும் அதிதி சங்கர், தனது இயல்பான நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சோனா ஒலிக்கலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. அவர் எதற்காக அர்ஜுன் தாஸை காதலித்தார், எதற்காக பிரிந்தார், மீண்டும் எதற்காக வந்தார், ஆகியவற்றுக்கு திரைக்கதையில் அழுத்தமான காரணங்கள் இல்லாததால், அவரும் அவரது கதாபாத்திரமும் படத்துடன் ஒட்டாமல் பயணிக்கின்றனர்.
டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், அருண்குமார் மணி, செளந்தர்யா மனோகரன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு எளிமையாக இருப்பதோடு, நாயகனின் சோகமான முகத்தைப் போலவே முழுப்படத்தையும் பொலிவற்றதாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
ஹேஷாம் அப்துல் வஹாப்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். தொய்வாக நகரும் திரைக்கதையால் சோர்வடைந்த பார்வையாளர்களுக்கு பாடல்கள் உற்சாகமூட்டும் விதத்திலும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டும் விதத்திலும் பயணித்திருக்கிறது.
முதல் பாதியில் நாயகியின் காதல், இரண்டாம் பாதியில் நாயகனின் காதல் என்று நகரும் கதையை எந்தவிதமான சுவாரஸ்யமும், மனதை தொடும் காதல் உணர்வுகளும் இல்லாமல் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ்.
நாம் பார்த்து பழக்கப்பட்ட காதல் கதை தன என்றாலும், அதை உணர்வுப்பூர்வமாகவும், ரசிக்க கூடிய விதத்திலும் கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காதல் மற்றும் காதல் ஜோடி பிரிவு அழுத்தம் இல்லாமல் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
அதிதி சங்கரின் துருதுரு நடிப்பும், அர்ஜுன் தாஸின் இறுக்கமான மனநிலையும், பிளாஷ்பேக்கில் ஏதோ பலமான காரணம் இருக்கிறது, என்ற எதிர்பார்ப்புடன் முதல் பாதி படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றாலும், இரண்டாம் பாதி படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியிருப்பதோடு, பார்வையாளர்களை சோர்வடைய வைத்து விடுகிறது.
மொத்தத்தில், ‘ஒன்ஸ்மோர்’ ஒருமுறை கூட பார்க்க முடியாது.
ரேட்டிங் 2.5/5