Take a fresh look at your lifestyle.

’பருந்து’ திரைப்பட விமர்சனம்

35

நன்றாக படிக்க கூடிய, வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவரான உமா தன் வீட்டில் கார் ஓட்டுநராக வேலை செய்யும் மூர்த்தியிடம் காதல் வயப்பட்டு, அவருடன் ஊரை விட்டு ஓடி விடுகிறார். உமாவின் அக்காவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவம் வெளியே தெரிந்தால், மூத்த மகளின் திருமணம் நிற்பதோடு, அறியாத வயதில் ஏற்பட்ட காதலால் தன் இளைய மகளின் வாழ்க்கை என்னவாகுமோ, என்ற அச்சத்தில் அவரது தந்தை மாரிமுத்து பறிதவிக்கிறார்.

மாரிமுத்துவின் நண்பரும், ஊர் தலைவருமான அழகுமலை விசயம் அறிந்து, யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி, பிரச்சனையை தீர்த்து வைக்க முடிவு செய்கிறார். அதன்படி, அழகுமலை மற்றும் விநாயக் இருவரும் ஓடிப்போன உமா மற்றும் மூர்த்தியை தேடி செல்ல, அவர்களை கண்டுபிடித்தார்களா ?, பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கண்டார்களா ?, என்பதே ‘பருந்து’ படத்தின் கதை.

இளம் ஜோடிகளாக நடித்திருக்கும் உமா மற்றும் மூர்த்தி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இளம் வயது காதலர்களையும், அவர்களது பிரச்சனைகளையும் மிக சரியான முறையில் பிரதிபலித்திருக்கிறார்கள்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ஊர் தலைவராக நடித்திருக்கும் அழகுமலை, உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். அழகுமலையின் உதவிக்கரமாக வலம் வரும் விநாயக், ஆக்‌ஷனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

மன்சூர் அலிகான், பேரரசு, அப்புக்குட்டி, செண்ட்ராயன், மாரிமுத்து, சர்மிளா என அனைத்து நட்சத்திரங்களும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பால் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் காசிவிஸ்வநாதன் கிராமத்து அழகையும், ஆக்‌ஷன் காட்சிகளின் அதிரடியையும் நேர்த்தியாகவும், தரமாகவும் தன் கேமரா கண்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

ஜேம்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை விவரிப்பதோடு, கேட்பதற்கு இனிமையானதாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

அறிவுரை சொல்லும் படம் என்றாலும், காட்சிகள் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகரும்படி தொகுத்திருக்கிறார் ஜெயகிருஷ்ணா.

எழுதி இயக்கியிருப்பதோடு, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் அழகுமலை, கிராமங்களில் எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களை காட்சிகளாக வடிவமைத்து ரசிக்க வைத்திருப்பதோடு, அறியாத வயதில் வரும் காதலால், ஒரு குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது, என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி, அதற்கான தீர்வையும் கொடுத்திருப்பது பராட்டுக்குரியது.

கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாக இருந்தாலும், சமூகப் பொறுப்புடன் திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் அழகுமலை, தான் சொல்ல நினைத்ததை நேர்மையாக சொல்லியிருப்பதோடு, எந்த ஒரு தரப்பினரையும் பாதிக்காதவாறு நடுநிலையோடு சொல்லி, அனைத்து தரப்பினரையும் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘பருந்து’ அறியாத வயதில் ஏற்படும் காதல் நோயில் சிக்கியவர்களை குணப்படுத்தும் நல்ல மருந்து.

ரேட்டிங் 3/5