Take a fresh look at your lifestyle.

40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200 புதுமுகங்களை வைத்து நெப்போலியன் உருவாக்கியிருக்கும் ‘அமெரிக்க ஆவி’!

17

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.

அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார். வினு படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இந்து ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார். காமெடி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமிதத்துடன் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. படக் குழுவினருடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் குணால் நெப்போலியன் பேசுகையில், ”இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ..இது வேற மாதிரியான படம். தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் தான் முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம். அமெரிக்காவில் வாழும் நம்முடைய இனத்தினரிடம் இவ்வளவு திறமைகள் மறைந்திருக்கிறது என்பதை காணும் போது ஆச்சரியமாக இருந்தது. இது சின்ன விசயம் அல்ல. அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கான வேலையை செய்து கொண்டே கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தில் இப்படத்தில் பணியாற்றினார்கள். அதை நினைக்கும் போது எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக இருக்கிறது.

‘அமெரிக்க ஆவி’ என்ற டைட்டிலை பற்றி சொல்ல வேண்டும். ஆவி என்றால் நாம் பேய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது. அதே தருணத்தில் ஆவி என்பதற்கு அமெரிக்காவை பொறுத்தவரை மற்றொரு பொருளும் இருக்கிறது. அமெரிக்காவில் பல நாடுகளில் இருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள் அதிகம். அவர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள். முயற்சி செய்து வெற்றி பெறுபவர்கள். அந்த கோணத்திலான பொருளும் இப்படத்தில் கதாபாத்திரங்களாக இடம் பிடித்திருக்கிறது. எனவே இந்த படத்தில் பேயும், பிசாசும் இருக்கிறது அத்துடன் சுவாரசியமான மற்ற விசயங்களும் இருக்கிறது.

இந்தப் படத்தில் மற்றொரு சுவராசியமான விசயமும் இருக்கிறது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் தனுஷ் நெப்போலியன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால்.. அவர் தான் எனக்கு முதலாளி. அவரால் இங்கு வர இயலவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியின் நேரலையை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

‘அனைவரும் இந்த திரைப்படத்திற்கு குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்க வேண்டும்’ என அவர் இங்குள்ள ரசிகர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார். இந்தப் படத்தை வெற்றி பெற செய்வது நம்முடைய கடமை” என்றார்.

நடிகர் நெப்போலியன் பேசுகையில், ”இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என
தோராயமாக 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக சிலர் மட்டுமே இங்கு இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் – டாக்டர்கள் – சயின்டிஸ்ட்- புரொபசர்ஸ்- என எல்லோரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.

இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில்.. இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம்.

சிவாஜி சார் நடித்த ‘பாரத விலாஸ்: படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும்.

1994 ஆம் ஆண்டில் சன் டிவி நேரலை காட்சி தொடங்கிய போது, நானும், இயக்குநர் பாண்டியராஜனும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவிற்கு சென்று தொடங்கி வைத்தோம். அன்று முதல் எங்களுக்குள் ஏற்பட்ட நெருங்கிய நட்பு இன்று வரை நீடிக்கிறது. அவர் இங்கு வந்து எங்கள் படக் குழுவை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும் இங்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.

அறிமுக நடிகர் மகேஷ் பேசுகையில், ”இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக ஜனவரி மாதத்தில் அனைவரையும் ஒரு பிரத்யேக உடையில் வர வேண்டும் என நெப்போலியன் சொன்னார். அப்போது நாங்கள் எல்லோரும் ஆடிஷன் தான் நடைபெறப் போகிறது என நினைத்திருந்தோம். ஆனால் அவர் உங்களுக்கெல்லாம் ஆடிஷன் இல்லை நடிக்கலாம் என்றார். அதன் பிறகு அனைவருக்கும் நெப்போலியன் சார் நடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எங்களுக்காக நடித்துக் காட்டியது மறக்க முடியாத அனுபவம். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது நடைபெறும் அனைத்து தொழில்நுட்ப விசயங்களை நேரில் பார்த்து ரசித்தோம். இந்தப் படத்தில் என்னுடைய அம்மா தான் நெப்போலியன் சாரின் அம்மாவாக நடித்திருக்கிறார். அது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தைக் காண நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் பேசுகையில், ”நான் ஒன்பது வயதிலேயே பழைய ஃபிலிம் வைத்து சூரிய ஒளி மூலம் சுவற்றில் அந்த படத்தை காண்பித்திருக்கிறேன். இதுதான் என்னுடைய தொடக்க கால பிலிம் டைரக்ஷன் ஆர்வம். அதற்கு பின் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தேன். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக அமெரிக்காவில் செட்டிலாகி விட்டேன். அங்கு இருந்த காரணத்தினால் சினிமா பற்றிய தொடர்பு துண்டித்து போய்விடுமோ..! என பயந்தேன். அதற்காக இப்போதும் பல கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் ஒரு முறை நெப்போலியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என்னால் தனுஷை விட்டுவிட்டு வெளியில் வந்து நடிக்க முடியாது என்றார். அந்தத் தருணத்தில் அமெரிக்காவிலேயே ஏதாவது படத்தை உருவாக்க முடியுமா? அதற்கான கதை இருக்கிறதா? என கேட்டார். அதன் பிறகு மதிய உணவு அருந்தினோம். அத்துடன் அவர் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டை காண்பித்தார். மூன்றரை ஏக்கரில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான வீடு அது. மரங்களுக்கு நடுவே அழகாக அமைந்திருந்த அந்த வீட்டை பார்த்ததும் ஆங்கில திரைப்படங்களில் வருவதை போல் இருந்தது. அதன் பிறகு இந்த வீட்டை மையப்படுத்தி ஏதேனும் கதையை உருவாக்க முடியுமா? எனக் கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து கதையை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து போனது. அப்போது அவர் இது வழக்கமான ஹாரர் படமாக இருக்கக் கூடாது. காமெடி கலந்த ஹாரர் படமாக இருக்க வேண்டும், என்றார்.

அதற்குப் பிறகு ஒரு கதையை உருவாக்கினோம். அந்தக் கதையை நெப்போலியனும், அவரது வாரிசுகளான குணால் – தனுஷ் என அனைவரும் இணைந்து அட்டகாசமான திரைக்கதையாக உருவாக்கினோம். இந்தப் படத்திற்காக பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் ‘நேஷ் வில்’ பிரபு பேசுகையில், ”என்னுடைய முழு பெயர் பிரபு தொப்புடு அமரேசன். என்னுடைய தாத்தா டி.எஸ். அமரேசனுக்கு நன்றி. அவர் ஆர் எஸ் மனோகர் நடித்த மேடை நாடகங்களை இயக்கியவர். 1920 களில் அவர் மறைந்து விட்டார். அவர் இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்.

நான் சென்னையில் தற்போது பிரபலமான ஒளிப்பதிவாளர்களாக திகழும் மனோஜ் பரஹாம்சா, அறிவழகன் ஆகியோரின் அறையில் தான் நான் இருந்தேன். அதனால் கேமரா லென்ஸ், லைட்ஸ் அதைப்பற்றி எல்லாம் தெரியும். அதன் பிறகு அமெரிக்காவிற்கு சென்றபோது அங்கு நடைபெறும் சிறிய நிகழ்வுகளை எல்லாம் கேமரா மூலம் பதிவு செய்தேன். அப்போதுதான் நெப்போலியன் அறிமுகமானார். அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளுக்கெல்லாம் கேமரா மேனாக இருந்தேன். அதன் பிறகு தான் ஜப்பானில் தனுஷின் கல்யாணம் நடைபெற்ற போது அதனை பதிவு செய்தேன். அப்படி என்னை படிப்படியாக மெருகேற்றி தற்போது ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி” என்றார்.

ஃபெப்சி தலைவர் இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், ”இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் போது ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தை பார்ப்பது போல் இருக்கும். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். ஒரு திரைப்படத்தில் ஒருவரை புது முகமாக அறிமுகப்படுத்தி நடிக்க வைப்பது எளிது. ஆனால் ஒட்டுமொத்த திரைப்படத்திலும் அனைவரையும் புதுமுகமாக அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பது என்பது உலக மகா கடினமான வேலை. படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்து அவர்களிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார்கள். அதிலும் பாடல் காட்சியில் அனைவரும் ரிதத்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள். இது அவர்களின் நடிப்பின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியது. இதற்காக கலா மாஸ்டருக்கு நன்றி.

நெப்போலினை பொறுத்தவரை ஒரு வேலையை செய்தால் அதனை சரியாக செய்திட வேண்டும் என நினைப்பவர். அது நடிகர் சங்க தலைவராக இருந்தாலும் சரி.. நடிகராக இருந்தாலும் சரி.. அரசியல்வாதியாக இருந்தாலும் சரி.. ஒரு வேலையை செய்தால் அதனை சரியாக செய்ய வேண்டும் என நினைப்பார். அந்த அளவிற்கு அவர் நல்ல மனிதர்.

இப்படத்தின் ஹீரோயின் ஒரு டாக்டர். அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. அவருடைய ஓய்வு நேரத்தின் போது அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிப்பார். அதுவரை படக்குழுவினர் அங்கு காத்திருப்பார்கள். இந்த படத்தின் உச்சகட்ட காட்சியில் அட்டகாசமான சண்டை காட்சியை சண்டை பயிற்சி இயக்குநர் பி சி.ஸ்டண்ட் வடிவமைத்திருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் ” என்றார்.

திருமதி ரோஜா செல்வமணி பேசுகையில், ”வி சேகர் இயக்கத்தில் ‘வீட்டோட மாப்பிள்ளை’ படத்தில் நான் நெப்போலியுடன் நடித்திருக்கிறேன் அவர் என் சக நடிகர். அவரைப் பற்றி என்ன சொன்னாலும் அது குறைவு தான் அவர் ஒரு நல்ல கலைஞர்… நல்ல அரசியல்வாதி… நல்ல தொழிலதிபர்… நல்லதொரு தந்தை.. இதற்கு மேல் அவர் நல்ல மனிதரும் கூட. நீண்ட நாட்களுக்குப் பிறகு நெப்போலியனை ஒரு நடிகராக திரையில் பார்க்கும்போது சக நடிகையாக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் கூட 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறேன். ஒரு கலைஞருக்கு ரசிகர்கள் -கேமரா- படப்பிடிப்பு தளம் -ஆகியவற்றுடன் பழகிய பிறகு, அதை விட வேண்டும் என்பது கடினமானதாக இருக்கும். எங்களுடைய குடும்ப பணி இருந்தாலும் ரசிகர்களுக்காக… கலைக்காக… மீண்டும் நடிக்க வருவதில் மகிழ்ச்சி தான். அதிலும் அவர் நல்ல கதையுடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகை தந்திருக்கிறார். இதற்காகவே நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதனால் இந்தப் படத்தை வெற்றி படமாக மாற்றுவதற்கு மவுத் பப்ளிசிட்டி, சோசியல் மீடியா பப்ளிசிட்டி ஆகியவற்றை அனைவரும் செய்திட வேண்டும். எனக்கும், என் மகளுக்கும் பேய் படம் என்றால் பயம். இருந்தாலும் இந்தத் திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்” என்றார்.

நடிகர் நாசர் பேசுகையில், ” நெப்போலியன் உடனான பயணம் ‘கிழக்கும் மேற்கும்’ படத்தில் தொடங்கி, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அந்தப் படத்திற்காக நாங்கள் இருவரும் ஏறத்தாழ 30 நாட்கள் ஒன்றாகவே இருந்தோம். இப்போது எப்படி இருக்கிறாரோ…! அப்போதே அப்படித்தான் இருந்தார்.‌ அப்போது அவர் வாழ்க்கையை எப்படி திட்டமிட்டாரோ… அதே போன்ற வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். இது எனக்கு மிக பெருமையாக இருக்கிறது. சில பட்டங்கள் – சில நற்பெயர்களை- சம்பாதிப்பது கடினம். கஷ்டப்பட்டு உழைத்தால் கோடீஸ்வரன் ஆகலாம். கஷ்டப்பட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகலாம். ஆனால் மனதார எப்போதும் நெப்போலியனை வாழ்த்தும் போது ‘நல்ல’ என்றொரு வார்த்தையை சேர்த்துக் கொள்வார்கள். அது எல்லோருக்கும் கிடைக்காது.

என்னுடைய மகன் விபத்தில் சிக்கிய போது எனக்கு மிகப்பெரும் ஆறுதலை சொல்லியவர் நெப்போலியன் தான். ‘நல்ல’ என்ற பெயரை.. நெப்போலியன் மட்டும் சம்பாதிக்கவில்லை. அவருடைய மனைவியும் சேர்த்து தான் சம்பாதித்திருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக என் மனமார்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு நாங்கள் யாரும் கேட்காமல் அவராக முன் வந்து ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக கொடுத்தார்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் நெப்போலியன் இளமையாக தோன்றுகிறார். தற்போது தான் ஒரு பத்திரிக்கைக்கு கட்டுரையை எழுதி விட்டு வந்தேன். இந்தியாவில் குழந்தைகளுக்கான படம் என்பது .0 சதவீதத்தில் கூட இல்லை. நாம் குழந்தைகளுக்காக படத்தை உருவாக்கியது இல்லை. அந்த வகையில் இந்த படம் குழந்தைகளுக்கான படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவருக்கு உறுதுணையாக இருந்த நேஷ் வில் இருந்து இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், ”நெப்போலியன் நடிக்க தொடங்கும் காலகட்டத்திலேயே நல்ல நடிகர் என்ற பெயருடன்.. நல்ல மனிதர் என்ற பெயரையும் சம்பாதித்திருக்கிறார். எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்திருந்தார். அவர் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தபோது சங்க நிகழ்வுகளுக்காக கடினமாக உழைத்தவர். அவர் எல்லா இடத்திலும் ஒரு ராணுவ வீரரை போல் செயல்படுவார். நான் இந்தப் படத்தை பார்த்தேன் நிச்சயமாக பொழுதுபோக்கு அம்சம் உள்ள படமாக உருவாகி இருக்கிறது. இது நிச்சயம் கமர்சியல் திரைப்படமாக உருவாகி இருக்கும் என நம்புகிறேன். பெப்சிக்கான கட்டிடத்திற்கு முதல் நன்கொடையை கொடுத்தவர் நெப்போலியன் தான். இவருக்கு திரைத்துறை சார்பில் தனியாக பாராட்டு விழா நடத்திட வேண்டும். என்னுடைய திரையுலக அனுபவத்தில் நான் பார்த்த இரண்டு ‘நல்ல’ மனிதர்களில் ஒருவர் விஜயகாந்த். மற்றொருவர் நெப்போலியன் தான் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடன இயக்குநர் கலா பேசுகையில், “இங்கு மூன்று பாடல்களை தான் திரையிட்டார்கள். படத்தில் மேலும் சில பாடல்கள் இருக்கிறது. நெப்போலியனும் நானும் எவ்வளவுதான் கற்றுக் கொடுத்தாலும் அதை அவர்கள் கற்றுக்கொண்டு நடித்ததற்கு நன்றி.
நெப்போலியன் என்னுடைய முப்பது ஆண்டுகால நெருங்கிய குடும்ப நண்பர். அவர் நடிகர் சங்கத்திற்கு மட்டுமல்ல எங்களுடைய நடன இயக்குநர்கள் சங்கத்திற்கும் நன்கொடை வழங்கி இருக்கிறார். நடிகர் நாசர் குறிப்பிட்டது போல்… தயாரிப்பாளர் சிவா குறிப்பிட்டதை போல்… நெப்போலியன் நல்ல மனிதர். அவரைப் போலே அவருடைய வீட்டின் பெண்மணியான சுதாவும் நல்ல மனுஷி. அவர்களை நான் திருமணமான தருணத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார். இந்த திரைப்படம் ஆவி சம்பந்தப்பட்ட படம் அல்ல. இது ஒரு அழகான குடும்ப திரைப்படம். இந்தப் படம் நிச்சயமாக சூப்பர் ஹிட் ஆகும்” என்றார்.

இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் பேசுகையில், ”இயக்குநர் ஜே பி ஆர் மூலமாக நெப்போலியன் சந்தித்து, இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய திரை இசை பயணத்தில் இந்தப் படம் ஒரு மைக்கல். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், ”இந்த மேடை பேரன்பிற்கான மேடை. அவரைப் பற்றி நான் மணி கணக்கில் பேசலாம். அவரிடம் நான் whatsapp மூலம் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.‌ உடன்பிறந்த சகோதரர் போன்றதொரு உணர்வு எனக்குள் இருக்கிறது. மிகச்சிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தில் நானும் ஒரு புள்ளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை பாராட்டுவதற்கு மற்றொரு மேடை கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்கிறேன் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், ” புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது நான் ‘உறுதிமொழி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்- ஒல்லியாக உயரமாக இருந்த ஒருவரை ‘இவர் தான் குமரேசன்’ என அறிமுகப்படுத்தினார்.‌ அப்போது அவரிடம் ‘நான் உன்னை மிகப்பெரிய வில்லனாக நடிக்க வைக்கிறேன்’ என உறுதிமொழி கொடுத்தேன். அதன் பிறகு ‘எஜமான்: படத்தில் அவரை நடிக்க வைத்திருந்தேன் அதற்காக கடுமையாக போராட வேண்டியது இருந்தது ரஜினி சாரே வேண்டாம் என்று சொன்னார். அப்போது அவரிடம் ஏன் நெப்போலியன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்? என்பதற்கான காரணத்தை சொன்னேன். அதைக் கேட்டு இது புதிதாக இருக்கிறதே..? என சொல்லிய பிறகு அவர் ஒப்புக்கொண்டார். நெப்போலியனுக்காக அந்தக் கதையின் பல மாற்றங்களை செய்தேன். அந்தப் படத்தில் அவர் பேசுவதை போல் இடம்பெறும் ஒரு வசனம் ( கல்யாண வீடாக இருந்தால் மாப்பிள்ளை…) இன்று வரை பிரபலம். அவருடன் அந்த ஒரு படத்தில் மட்டும் தான் பணியாற்றிய முடிந்தது. அது எனக்கு நிறைவானதாகவும் இருந்தது.

இந்த ‘அமெரிக்க ஆவி’ படத்தில் ஆவி யார்? என்பதை சொல்லவே இல்லையே..? இந்த படத்தின் போஸ்டரில் நெப்போலியன் ஒரு கிளென் ஈஸ்ட்வுட் போல் இருக்கிறார். நாம் வயசான ஆவி- நல்ல ஆவி- கெட்ட ஆவி -இளம் ஆவி- விபத்தில் இறந்து போன ஆவி- காதலில் தோல்வி அடைந்த ஆவி -வீட்டை வாங்க முடியாமல் உயிரிழந்த ஆவி – என பல ஆவிகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் எந்த ஆவி அமெரிக்கா ஆவி என தெரியவில்லை. எந்த ஆவியாக இருந்தாலும் நெப்போலியன் ஒரு சிறப்பான ஆவியைத்தான் நமக்கு காண்பிப்பார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.