Take a fresh look at your lifestyle.

’பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்பட விமர்சனம்

16

நாயகன் இளனும், நாயகி சான்வி மேக்னாவும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சான்வி மேக்னா, மணக்கோலத்திலேயே மண்டபத்தில் இருந்து தலைதெறிக்க தன் வீட்டுக்கு ஓடிவிடுகிறார். என்ன, ஏது என்று புரியாமல் அனைவரும் அதிர்ச்சியடைய, தன் பெற்றோரை பிரிய மனம் இல்லாதது தான் காரணம் என்று தெரிய வருகிறது. கணவர் இளன் மற்றும் பெற்றோர் அறிவுரை சொல்லியும் கேட்காத சான்வி மேக்னா, திருமணத்திற்குப் பிறகு பெண் எதற்காக கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டும், கணவர் மனைவி வீட்டுக்கு வரலாமே..!, என்று பெண்ணியம் பேசுகிறார்.

ஆரம்பத்தில் சான்வியின் எதிர்பார்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளன், பிறகு மனைவியின் விருப்பத்தை ஏற்று, அவரது வீட்டில் வாழ செல்கிறார். வேலை இல்லாமல், மனைவி சம்பாத்தியத்தில், மாமியார் வீட்டில் வசிக்கும் இளனின் திருமண வாழ்க்கை ‘பியார் பிரேமா காதல்’ போல் இனித்ததா?, இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.

’பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த இளன், ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் இயக்குநர் மற்றும் ஹீரோவாக கவனம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார். ஆனால், காதலை கையாண்ட விதம் அவரை காப்பாற்றினாலும், கல்யாணம் அவரை சற்று தடுமாற வைத்திருக்கிறது.

நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இளன், வயதுக்கு ஏற்ற துள்ளல் நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பொறுப்பில்லாத பிள்ளை, இனிக்க இனிக்கா காதலிக்கும் காதலர், மாமியார் வீட்டு மருமகன் என பலவிதமான பரிமாணங்களை தனது இயல்பான நடிப்பின் மூலம் இயல்பாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனம் கவர்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, துரு துரு நடிப்பாலும், கவர்ச்சியான உடையாலும் கவனம் ஈர்க்கிறார். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கும் சான்வி மேக்னா, முதல் படம் போல் இல்லாமல் பல காட்சிகளை அசால்டாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.

நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, முதன்மை கதாபாத்திரங்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் ஆகியோரது கதாபாத்திரங்கள் அறிவுரை கூறவும், திரைக்கதை ஓட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

யோகி பாபு வரும் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது. மாறனின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது. நட்சத்திரங்களை அழகாக காட்டியிருப்பவர், மொட்டை மாடியையும், நாயகியின் வீட்டையும் வைத்தே பெரும்பாலான காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை அதீத சத்தம் இல்லாமல் அளவாக பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

காதலோடு பயணிக்கும் முதல் பாதி படத்தை ரசிக்கும்படி தொகுத்த பிரதீப் இ.ராகவ், கல்யாண வாழ்க்கையோடு பயணிக்கும் இரண்டாம் பாதி படத்தை திரைக்கதை தொய்வடையும் விதத்தில் தொகுத்திருக்கிறார்.

திருமண முறையின் வழக்கத்தை மாற்றும் நிவேதிதா போஹங்கர் கதையில் இருக்கும் சுவாரஸ்யம் அதற்கான திரைக்கதையில் இல்லாதது படத்தின் பலவீனம். குறிப்பாக மனைவி வீட்டில் கணவர் வசிப்பதும், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அப்படியே ஆண்கள் எதிர்கொள்வது போல் வடிவமைத்த காட்சியமைப்புகள் படத்திற்கு கைகொடுக்காமல், பார்வையாளர்களை கடுப்பேற்ற செய்கிறது.

கூடுதல் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இளன், காதலை திறம்பட கையாண்டு ரசிகர்களை கவர்ந்தது போல், கல்யாண வாழ்க்கை மற்றும் அதில் எழும் சிக்கல்களை சரியான முறையில் கையாளாமல் தடுமாறியிருக்கிறார்.

முதல் பாதி படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள், சோசியல் மீடியாக்களில் ஒரு விசயம் எப்படி தீயாக பரவுகிறது, அதற்கு எப்படி எல்லாம் கருத்துகள் வருகிறது, ஆகியவை படத்தை ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் மாமியார் வீட்டில் வாழும் மருமகனின் திண்டாட்டம், அங்கு எதிர்கொள்ளும் சிக்கலை சமாளிப்பதற்கான இளனின் வழிமுறைகள் போன்றவை திரைக்கதையோடு ஒட்டாமல் பயணிப்பதோடு, பார்வையாளர்களை சோர்வடைய செய்து விடுகிறது.

மொத்தத்தில், ‘பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக வெற்றி பெற்ற இளன் ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் ஹீரோவாக வெற்றி பெற்று, இயக்குநராக தோல்வியடைந்திருக்கிறார்.

ரேட்டிங் 2.8/5