’சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்

ஐடி ஊழியரான ஜெய், மீனாட்சியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். மறுநாளே தன் காதலை சொல்லி அவரை திருமணம் செய்து கொள்கிறார். தேன்நிலவுக்காக கொடைக்கானல் செல்லும் ஜெய் – மீனாட்சி தம்பதி, கருடா ராம் நடத்தும் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. மறுபக்கம், ஜெய் – மீனாட்சி தம்பதியை பிரித்து, மீனாட்சிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது அமைச்சர் தந்தை முயற்சிக்கிறார்.

சொகுசு விடுதியின் சிக்கல் மற்றும் மனைவியை தன்னிடம் இருந்து பிரிக்க நடக்கும் சதி ஆகியவற்றில் ஜெய் சிக்கி தவிக்க, திடீரென்று மீனாட்சி காணாமல் போய் விடுகிறார். அதற்கு ஜெய் தான் காரணம் என்று சந்தேகிக்கும் போலீஸ் அவரை கைது செய்கிறது. மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண வாழ்க்கை, சட்டென்று உருவெடுத்த பல சிக்கல்களில் சிக்கிக்கொள்ள, அத்தனை சிக்கல்களையும் ஜெய் தீர்த்து மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்தாரா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜெய், வழக்கம் போல் தன் துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், விஜய் ரசிகர் என்ற அடையாளத்துடன், விஜய் போல் வெளிப்படையாக நடித்திருக்கிறார். அது சில காட்சிகளில் அவருக்கு கை கொடுத்தாலும், பல காட்சிகளில் அவரை பலவீனப்படுத்தியிருக்கிறது. காதல் காட்சிகளிலும், கண்கலங்கும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும் கவர்கிறார். தந்தை மீதான கோபம், நண்பர் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் என்று பல்வேறு உணர்வுகளை அளவாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.

ஜெயின் நண்பராக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கமான தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருப்பதோடு, இரட்டை அர்த்த வசனங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். ஆனால், அவரது எந்த முயற்சியும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கவில்லை. கவுண்டமணிக்கு செந்தில் போல், யோகி பாபுவிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா கதிர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாயகன், நாயகி இருவரையும் அழகாக காட்டியிருப்பவர், காட்சிகளை தரமாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். இரைச்சல் இல்லாத பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கும், திரைக்கதை வேகத்திற்கும் கைகொடுத்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் டார்லிங் ரிச்சர்ட்சன், காட்சிகளை தொகுத்ததிலும், கதை நகர்த்தலிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி திருடப்படுகிறது, என்ற உண்மையை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.

இளமை ததும்பும் காதல், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்யும் இயக்குநர் பாபு விஜய், கதை சொல்லலில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

மொத்தத்தில் ’சட்டென்று மாறுது வானிலை’ வெற்றி பெறும்.

ரேட்டிங் 3.2/5