திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலர் வேலை கையில் எடுப்பதை புது டிரெண்டாக வைத்துள்ளார்கள். முதல்வர் ஜோசப் விஜய், தனது தேர்தல் பரப்புரையின் போது தொண்டர்கள் மூலம் வழங்கப்பட்ட வேலை கையில் ஏந்தி போஸ் கொடுத்தார். சமீபத்தில் விமான நிலையத்தில் நடிகர் தனுஷுக்கு வரவேற்பளித்த அவரது ரசிகர்களும் அவர் கையில் வேல் ஒன்றை கொடுத்தார்கள். இப்படி வேலை கையில் ஏந்துவது பிரபலங்களின் புதிய டிரெண்டாகி வரும் நிலையில், சிவகார்த்திகேயனும் தனது சொந்த செலவில் வேலை கையில் ஏந்தியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது பெயரில் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, ‘வேலும் மயிலும்’ வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ‘தாய் கிழவி’ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘சேயோன்’ படங்களின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.
தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘வேலும் மயிலும்’ பாடல், முருகப் பெருமானின் அருள் மற்றும் தெய்வீக மகத்துவத்தை இசையின் வழியாக வெளிப்படுத்துகிறது. ஆழமான வரிகளும், நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் கலந்த இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.
இந்தப் பாடலின் ஆன்மீக சாரம் பாடலில் மட்டுமல்லாமல், அதை உருவாக்கியவர்களின் பெயர்களிலும் இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்கள் முருகப் பெருமானோடு தொடர்புடையவை. அவர்களின் ஆழமான பக்தியும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடும் இந்த இசைப் படைப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.
இந்தப் பாடலோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் சுயாதீன இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. புதிய குரல்கள் மற்றும் திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இது இருக்கும் எனவும் உறுதியளிக்கிறது.
எது எப்படியோ, முதல்வர் ஜோசப் விஜய் கொடுத்த துப்பாக்கியை பெற்ற சிவகார்த்திகேயன், அவரது வழியை பின்பற்றும் நோக்கில் தற்போது வேலை கையில் ஏந்தியுள்ளதை பார்த்தால் விரைவில், அவரைப் போல் அரசியலிலும் பயணிப்பாரோ..! என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

