Take a fresh look at your lifestyle.

’4 இடியட்ஸ்’ திரைப்பட விமர்சனம்

40

மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் கசிகிறது. இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் திருடர்களான புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டு பங்களாவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது, அந்த பங்களாவின் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், சிக்கிய திருடர்களுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை ரவி மரியா போட, அதற்கு நான்கு பேரும் சம்மதிக்கிறார்கள்.

இதற்கிடையே, அந்த கடற்கரை பங்களாவின் உரிமையாளரான மருத்துவர் வின்சென்ட் அசோகன் பற்றியும், காவலாளி ரவி மரியா பற்றியும் நான்கு திருடர்களுக்கும் ஒரு உண்மை தெரிய வர, அச்சத்தில் உறைந்து போகிறவர்கள், அந்த உண்மை தங்களுக்கு தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா ?, பங்களாவின் உரிமையாளர் மற்றும் காவலாளியின் மர்மம் நிறைந்த பின்னணி என்ன ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘4 இடியட்ஸ்’

கதையின் நாயகன் என்ற அந்தஸ்த்துடன் நடித்திருக்கும் புகழிடம் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் காமெடி ஒன்று கூட ஒர்க் அவுட் ஆகவில்லை. அதற்கு காரணம், விஜய் தொலைக்காட்சி போல் பின்னணியில் சிரிக்கும் ஒலியை இசையமைப்பாளர் சேர்க்கவில்லை. தொலைக்காட்சிகளில் எதை எதையோ செய்து, யார் யாரையோ கலாய்த்து அவர்களை எளிதில் சிரிக்க வைப்பதோடு, அவர்களாகவே சிரித்துக் கொண்டு, ”நல்ல காமெடி…” என்று தங்களை தாங்களே புகழ்ந்துக் கொள்வார்கள். ஆனால், சினிமாவில் அப்படி பூச்சாண்டி காட்ட முடியாது. காரணம், கதையோடு பயணிக்கும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை சிரிக்க வைக்க அதிகம் சிந்திக்க வேண்டும், சரியான டைமிங்கில் காமெடி வசனங்களை உச்சரிக்க வேண்டும். ஆனால், அது தனக்கு வரவே வராது, என்று ஒவ்வொரு படங்களிலும் புகழ் நிரூபித்துக் கொண்டிருப்பது போல், இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

புகழ் உடன் கூட்டணி அமைத்திருக்கும் கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகியோரது நிலை புகழை விட பரிதாபம். இவர்களுடன் சேர்ந்து காமெடி என்ற பெயரில் மக்களை கடித்துக் குதறி இருக்கிறார் ரவி மரியா. வின்சென்ட் அசோகன் தனக்கான பணியை குறையின்றி செய்திருக்கிறார்.

வித்தியாசமான முறையில் பிரக்யா நயனை பயன்படுத்தியிருப்பவர்கள், அவர் மூலம் கவர்ச்சி பாடல் ஒன்றை வைத்து பார்வையாளர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கமர்ஷியல் அம்சங்களை கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் விதத்தில் காட்டியிருக்கிறது.

சுபாஷ் மணிரத்னத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்தவையாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சஜோ சுந்தர் முருகேசன், ஒரு குறிப்பிட்ட லொக்கேஷனின் முழு கதையையும் கையாண்ட விதம் மற்றும் பிரக்யா நயன் கதாபாத்திரத்தை பல்வேறு வகையில் பயன்படுத்திய விதம் போன்றவை படத்தை ரசிக்க வைத்தாலும், காமெடி என்ற பெயரில் முதன்மை கதாபாத்திரங்களின் ஓவர் ஆக்டிங் படத்தை பவீனப்படுத்தி விடுகிறது.

கமர்ஷியல் மற்றும் காமெடி படங்களை விரும்புகிறவர்களுக்கான அத்தனை அம்சங்கள் இருந்தாலும், அதை சரியான முறையில் திரைக்கதையோடு பயணிக்க வைத்திருந்தால் படம் மிகப்பெரிய சிரிப்பு சரவெடியாக வெடித்திருக்கும்.

மொத்தத்தில், ‘4 இடியட்ஸ்’ சிரிக்க வைப்பதற்குப் பதில் கடுப்பேற்றுகிறார்கள்.

ரேட்டிங் 2.5/5