’கருப்பு’ திரைப்பட விமர்சனம்

”கடவுளே வந்தாலும் அதை மாற்ற முடியாது” என்று சாதாரணமாக சொல்வோம், அப்படி ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளே, சராசரி மனிதராக முயற்சிக்கிறார். அது அவரால் முடிந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மையக்கரு.

பிரபலமான வழக்கறிஞராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, லஞ்சம் கொடுத்து தன் வழக்குகளில் வெற்றி பெறுவதோடு, நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதமான வேலைகளையும் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி, தன்னை மீறி நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது, என்ற கட்டமைப்பை உருவாக்குகிறார். இதனால், நீதிக்காக போராடுபவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க, அவர்களின் அழுகுரல் கேட்டு அந்த நீதிமன்றத்தில் இருக்கும் கருப்புசாமி சூர்யா, நேரில் வந்து ஆர்.ஜே.பாலாஜியை வெளுக்கிறார்.

வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தாலும், இங்கே எல்லாமே இப்படி தான், இதை யாராலும் மாற்ற முடியாது. முடிந்தால் நீங்க கடவுளாக அல்லாமல் சராசரி மனிதராக மாற்றிக் காட்டுங்கள், என்று கருப்புசாமி சூர்யாவிடம், ஆர்.ஜே.பாலாஜி சவால் விடுகிறார். அவரது சவாலை ஏற்றுக்கொள்ளும் கருப்புசாமி சராசரி மனிதராக, நீதித்துறையின் அவலநிலையை மாற்ற முயற்சிக்கிறார். அது அவரால் முடிந்ததா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகன் ஆர்.ஜே.பாலாஜியா அல்லது சூர்யாவா என்று தெரியவில்லை. சூர்யாவை விட ஆர்.ஜே.பாலாஜி தான் அதிக காட்சிகளில் வருகிறார்.

‘ஜெய்பீம்’ படத்தில் நீதிக்காக போராடும் ஒரு நேர்மையான வழக்கறிஞராக நடித்த சூர்யா, அதே நீதித்துறையில் நடக்கும் அநீதிகளையும், அநீதி இழைப்பவர்களையும் அழிக்கும் கருப்புசாமியாக ஆக்ரோஷமாக நடித்திருப்பதோடு, மதுரை வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமாகவும் நடித்திருக்கிறார்.

பேபி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, மாஸாக அறிமுகமாகி, மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, சில காட்சிகளில் வாதாடுகிறார். பாடல் காட்சியில் ஆட்டம் போடுகிறார். கடவுளிடம் வரம் கேட்டு நீதித்துறையை மாற்ற முயற்சிக்கிறார். இப்படி பல வேலைகள் செய்தாலும், திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்திருக்கிறார்.

நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, திருட்டு போன தன் தங்க நகைகளை மீட்க போராடும் கேரளத்தவராக நடித்திருக்கும் இந்திரன்ஸ், சுவாசிகா, சிவதா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருந்தாலும், பல இடங்களில் அதிகப்படியான ஒளிகள் மூலம் கண்களை சோர்வடைய செய்து விடுகிறார். கருப்புசாமி என்பதால் பல காட்சிகளில் சிவப்பு நிறம் அதிகமாக இடம்பெறுவதும், சண்டை காட்சிகளை அதிகப்படியான கிராபிக்ஸோடு வடிவமைத்ததும் உறுத்தலாக இருக்கிறது.

சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இன்ஸ்டா ரீல்ஸுக்கான இசையாகவே இருக்கிறது. குறிப்பாக வார்த்தைகள் புரியாதபடி, இசையின் சத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பவர், கருப்புசாமி பாடலை கூட கலாச்சாரத்திற்கு ஏற்ற குரலை பயன்படுத்தாமல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், அதிகப்படியான சத்தத்துடன் கூடிய பின்னணி இசையும் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் கலைவாணன், இயக்குநர் சொன்ன கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் அநீதிகளுக்கு கருப்புசாமி மூலம் சாட்டையடி கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

மக்களின் கடைசி நம்பிக்கையாகவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகவும் விளங்கும் நீதிமன்றங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் எப்படி செயல்படுகிறது என்பதையும், நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் விலைபோகும் நீதியரசர்கள், நீதிமன்றத்தின் எழுதப்படாத விதிமுறைகள் அதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் என்று பல விசயங்களை மிக தைரியமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, அதை கடவுள் பின்னனி இல்லாமல், சராசரி மனிதனின் தொடர் முயற்சி மற்றும் போராட்டம் மூலம் சொல்லியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘கருப்பு’ லஞ்சம் நிறைந்த நீதித்துறைக்கு சாட்டையடி.

ரேட்டிங் 3/5