‘டார்க் ஜியண்ட்’ (Dark Giant) திரைப்பட விமர்சனம்

நாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், தன் மனைவி மற்றும் தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார். கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஆதர்ஷ் மதிகாந்தை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும் ஒருவர், கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அவரது தாத்தா இருப்பதாகவும், அவர் தனது சொத்துக்களை தன் பேரன், பேத்திக்கு கொடுக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

சொத்து கிடைத்தால் தனது கடன் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தில், தன் மனைவி மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு செல்லும் ஆதர்ஷ் மதிகாந்த், சொத்துக்காக படுத்த படுக்கையாக இருக்கும் தாத்தா உடன் சில நாட்கள் தங்க முடிவு செய்கிறார். அப்போது அந்த வீட்டில் எதிர்பார்க்காத சில பயங்கரமான சம்பவங்கள் நடப்பதோடு, அவர்களை கிராமத்திற்கு வரவைத்த நபரும், படுத்த படுக்கையாக இருந்த அவரது தாத்தாவும், பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர் என்ற உண்மை தெரிய வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும், நாயகனின் குடும்பத்தை கிராமத்திற்கு வர வைத்ததற்கான பின்னணியையும், நெஞ்சம் பதறும் வகையில் சொல்வது தான் ‘டார்க் ஜியண்ட்’.

தொடர்ந்து திகில் மற்றும் வித்தியாசமான அமானுஷ்ய கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆதர்ஷ் மதிகாந்த், இந்த முறையும் சுவாரஸ்யமான ஒரு திகில் கதையில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது தலைமுடி அலங்கோலமாக இருந்தாலும், கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பது, சாத்தான் தன் உடலில் புகுந்த பிறகு தன்நிலை மறந்து நடப்பது, பிறகு தன்நிலை அறிந்து கலங்குவது, என்று பல உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன், குடும்பபாங்கான கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார். பயமும், பதற்றமும் கலந்த நடிப்பால் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறார்.

கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால், குறைவான காட்சிகள் வந்தாலும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் நடிகை கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அமுதவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரபிக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால் திகில் காட்சிகளை அச்சமூட்டும் வகையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை நெஞ்சை படபடக்க வைக்கிறார்.

விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பயங்கரத்தை பார்வையாளர்களிடம் கடத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

படத்தொகுப்பாளர் ஜி.ஜெ.திருச்செல்வம், பி.ஆர்.கிரியேஷன் ஸ்டுடியோஸின் வி.எஃப்.எக்ஸ் பணி, கலை இயக்குநர் பணி ஆகியவை படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் கே.எஸ்.கிஷான், திகில் கதைக்களத்தை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறார். ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதை அச்சத்துடன் பார்க்க வைத்து பல காட்சிகளில் சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.

கதை சொல்லலில் சில குளறுபடிகளை செய்திருந்தாலும், திகில் காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக தரமாக கொடுத்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.கிஷான், திகில் பட ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘டார்க் ஜியண்ட்’ தலைப்பு அளவுக்கு இல்லை என்றாலும், சிறிய அளவில் திகிலடைய வைக்கிறது.

ரேட்டிங் 2.8/5