Take a fresh look at your lifestyle.

’ஐ அம் கேம்’ (I Am Game) திரைப்பட விமர்சனம்

60

சூதாட்டங்கள் விளையாடுவதில் தீவிரம் காட்டும் நாயகன் துல்கர் சல்மான், கடனாளியாகி விடுகிறார். கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக கிரிக்கெட் சூதாட்டட்தில் ஈடுபடுகிறார், ஆனால் அதிலும் தோல்வியடைந்து மொத்த பணத்தையும் இழந்து விடுகிறார். இதற்கிடையே விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடையும் துல்கர் சல்மானின் ஒரு கை சிதைந்து விடுகிறது. இதனால், இறந்த ஒருவரது கை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் துல்சர் சல்மானின் வாழ்க்கையில் அவரது புதிய கை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

தன் பேச்சை கேட்காமல் அந்த கையே பல விசயங்களை செய்தாலும், அதன் மூலம் சூதாட்டங்களில் தொடர் வெற்றிகளை குவிக்கும் துல்கர் சல்மான், தன் புதிய கை தனக்கான அதிஷ்ட்டம் என்று நம்பும் போது, அந்த கை தொழிலதிபரும், மெட்ராஸ் கிரிக்கெட் அணியின் நிதியுதவியாளருமான மிஷ்கினை கொலை செய்ய முயற்சிக்கிறது. இதன் மூலம் அந்த கை தனக்கான அதிஷ்ட்டம் இல்லை, தன்னை பிரச்சனையில் சிக்க வைக்க வந்த ஆபத்து என்பதை துல்கர் சல்மான் உணர்கிறார். அப்போது அவர் மீதே அந்த கை கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது. அதில் இருந்து தப்பிக்கும் துல்கர் சல்மான், அந்த கையின் பின்னணியை கண்டுபிடித்து பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் ? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே ’ஐ அம் கேம்’.

படம் முழுவதும் ஸ்டைலான உடையில், ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் துல்கர் சல்மான், கை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சவாலான காட்சிகளை மிக சாமர்த்தியமாக கையாண்டு ரசிக்க வைக்கிறார். தன் உடலோடு பொருந்தியிருந்தாலும் தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் கையை வைத்துக் கொண்டு துல்கர் சல்மான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தன் நடிப்பு மூலம் நேர்த்தியாக பார்வையாளர்களிடத்தில் கடத்தி விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், மெழுகுச் சிலை போல் அழகாக இருக்கிறார். அமைதியான முகம், அளவான நடிப்பு என்று படம் முழுவதும் நாயகனுக்கு துணையாகவும், படத்திற்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கின், சூதாட்ட உலகத்தையும், அதன் செயல்பாடுகளையும் பார்வையாளர்கள் கண்முன் நிறுத்தும்படி நடித்திருக்கிறார். அவரது ஆக்ரோஷமான நடிப்பும், உடல்மொழியும் டேவிட் ஆப்ரஹாம் என்ற கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறது.

ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் ஆகியோருக்கு சிறிய வேடம் என்றாலும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித், இரவு நேர காட்சிகளை பல்வேறு விளக்குகள் மூலம் பிரகாசமாக காட்சிப்படுத்தி, சூதாட்ட உலகத்தில் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடந்தாலும், வண்ணங்கள் மற்றும் விளக்குகள் மூலம் அந்த உணர்வே பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் படம் முழுவதையும் வண்ணமயமாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு கூடுதல் வேகம் சேர்த்திருக்கிறது. அதிலும், கை செய்யும் களேபரங்கள் மற்றும் சண்டைக்காட்சிகளுக்கு தனித்துவமான பீஜியம் மூலம் இசையமைப்பாளர் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

சூதாட்டம் தான் படத்தின் மையக்கரு, அதை சுற்றி திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும், எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தின் மூலம் திரைக்கதையின் வடிவத்தை மாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ, படம் முழுவதையும் சிறு தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர் ஆகியோரது திரைக்கதை வழக்கமான பழிவாங்கும் கதையை வேறு பாதையில் பயணிக்க வைத்து, படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் சூதாட்டத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் நஹாஸ் ஹிதாயத், இத்தகைய சூதாட்டங்களும், அதை நடத்துபவர்களும் மக்களின் பேராசை மூலமாகவே உருவாகிறார்கள், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

சூதாட்டத்தை சுற்றி கதை நகர்ந்தாலும், சஸ்பென்ஸ், திரில்லர், ஆக்‌ஷன், காதல் என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் திரைக்கதையில் அளவாக கையாண்டு, ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களின் கவனம் சிதறாமல் படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்.

மொத்தத்தில் ‘ஐ அம் கேம்’ சுவாரஸ்யமான விளையாட்டு

ரேட்டிங் 3.5/5