பெண்கள் மற்றும் சிறுவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நடிகர் அர்ஜூன் தாஸ்!

அதிரடியான வில்லன் நடிகராக ரசிகர்களை கவர்ந்த அர்ஜூன் தாஸ், ’முபாசா ’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படங்களுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராக உருவெடுத்திருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அழுத்தமான கதாபாத்திரங்களில் பார்த்த அர்ஜூன் தாஸை, ஜாலியான, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களின் ஹீரோவாக ரசிகர்கள் பார்க்க போகிறார்கள்.

‘கான் சிட்டி’ படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களை கையில் வைத்திருக்கும் அர்ஜூன் தாஸ், அனைத்துவிதமான கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும் நடிகர் என்பதால், அவரது நடிப்பில் பல்வேறு பாணியிலான படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘கான் சிட்டி’ படத்தின் வெளியீட்டை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜூன் தாஸ், தனது சினிமா பயணம் மற்றும் அடுத்த திட்டங்கள் குறித்து கூறுகையில், “அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த எனக்கு, குட் பேட் அக்லி பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண் ரசிகர்கள் அதிகரித்து விட்டார்கள். திரையரங்கிற்கு செல்லும் போது, என்னை சந்தித்து பேசும் பெண்கள், அடிதடி, இரத்தம் போன்ற படங்களில் நடிக்க வேண்டாம், குடும்ப கதைகளில், நகைச்சுவைப் படங்களில் நடிங்க, என்று சொல்வார்கள். அவர்களுக்காக அப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும், என்று முடிவு செய்த போது தான் ‘கான் சிட்டி’ கதை என்னை தேடி வந்தது.

மிக சிறப்பான கதை, அனைத்து விசயங்களும் கொண்ட கதை. நிச்சயம் என் சினிமா பயணத்தை வேறு ஒரு வழியில் நகர்த்தக்கூடிய படமாக ‘கான் சிட்டி’ இருக்கும். முதல் முறையாக தந்தையாக நடித்திருக்கிறேன், நல்ல அனுபவமாக இருந்தது. மூத்த நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள், அவர்களுடன் நடிக்கும் போது பல நல்ல விசயங்களை கற்றுக்கொண்டேன்.” என்றார்.

நகைச்சுவை படங்களில் நடித்த அனுபவம் பற்றி கேட்ட போது, “நகைச்சுவை என்பது மிகவும் கடினமானது, ஆனால் மகிழ்ச்சியானது. கான் சிட்டி படத்தில் அதை நான் அனுபவித்தேன். இனி வரும் படங்கள் அனைத்தும் இதுபோன்ற பாணியில் இருக்கும். இப்படிப்பட்ட படங்களில் நான் நடிக்க வேண்டும் என்று பெண்களும், சிறுவர்களும் விரும்புகிறார்கள், என்னிடமே அதை தெரிவித்ததால் இதுபோன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும், என்று முடிவு செய்திருக்கிறேன்.” என்றார்.

மேலும், தனது திருமண வதந்தி பற்றி விளக்கம் அளித்தவர், “இதுபோன்ற வதந்திகள் எப்படி உருவாகிறது, என்று தெரியவில்லை. அப்படி எனக்கு திருமண ஏற்பாடு நடந்தால், அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து முறைப்படி அறிவிப்பேன்.” என்றார்.

வில்லன் கதாபாத்திரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை தான் நடித்த எதிர்மறை வேடங்கள் அனைத்தும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவற்றின் பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வமான காரணங்கள்தான் என்றார்.

“நான் நடித்த பல நெகட்டிவ் கதாபாத்திரங்களைப் பார்த்தால், அவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். ஒருவன் தன் சகோதரனுக்காகச் செய்கிறான், இன்னொருவன் தனது கடந்தகால காயங்களால் அந்த பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அதனால் பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரங்களை வெறுப்பதைவிட புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அதுவே அவர்களுடன் ஒரு இணைப்பை உருவாக்குகிறது,” என்று அவர் கூறினார்.

எதிர்காலத்திலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக செய்வேன். ஆனால் தற்போது அப்படிப்பட்ட எந்த திட்டமும் கைவசம் இல்லை. கதையும், கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம்,” என்று தெரிவித்தார்.

தனக்கு மிகவும் பிடித்த திரை வில்லன்கள் குறித்து பேசிய அவர், உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானது என்றார். தமிழ் சினிமாவில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி ஏற்றிருந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வில்லன் வேடமாக தன்னை கவர்ந்ததாகவும் கூறினார்.

“ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஒரு வலுவான பின்னணிக் கதை இருக்க வேண்டும். ஏன் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரம் மனதில் நிற்கும். முழுக்க முழுக்க இருண்ட கதாபாத்திரமாக இருந்தாலும், அது கதைக்குள் சரியாக பொருந்த வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

புதிய முயற்சிகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசும்போது, நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் எந்த வகை வேடமாக இருந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.

மேலும், தற்போது உருவாகி வரும் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் தலைப்பு குறித்தும் அவர் சுவாரஸ்யமான குறிப்பை பகிர்ந்தார். “படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதை இப்போது சொல்ல முடியாது. படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கே அதற்கான பதில் கிடைக்கும்,” என்று மர்மம் கலந்த புன்னகையுடன் கூறினார்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசும்போது, பல புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அடுத்தடுத்த காலங்களில் வித்தியாசமான கதைகளுடன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது.