‘பாலன்’ திரைப்பட விமர்சனம்

சிறை தண்டனை அனுபவிக்கும் கர்ப்பிணியான ஃபர்சானா பலதிங்கல் சிறையில் குழந்தை பெற்றெடுக்கிறார். சில வருடங்களுக்குப் விடுதலையாகும் அவர், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட வலியின் காரணமாக, யார் மீதும் நம்பிக்கை வைக்காமல் தன் மகனுடன் பல்வேறு அடையாளங்களில், பல இடங்களுக்கு பயணிக்கிறார். அப்போது தனியாக வசிக்கும் மூதாட்டி ஒருவரை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த பணியில் சேரும் அவர், அந்த இருப்பிடத்திலேயே நிரந்தரமாக வாழ முடிவு செய்து, தன் மகனை பள்ளியில் சேர்க்கிறார்.

வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் கிடைத்தாலும், எப்போதும் ஒரு வித அச்சத்தில் வாழும் அவர், பள்ளியில் இருந்து வரும் தன் மகனை தினமும் அழைத்துச் செல்லும் போது, குறிப்பிட்ட ஒரு இடத்தில் காத்திருக்க சொல்கிறார். எவ்வளவு நேரம் ஆனாலும், அந்த இடத்திலேயே காத்திருக்க வேண்டும், அம்மா நிச்சயம் வருவேன், என்று சொல்கிறார்.

ஒரு நாள் பள்ளியில் இருந்து வரும் மகன் அந்த இடத்தில் அம்மாவுக்காக காத்திருக்க, அவர் வரவில்லை. நீண்ட நேரமானதால் சிறுவனை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். பிரிந்த அம்மா- மகன் மீண்டும் சேர்ந்தார்களா ?, , அம்மா ஃபர்சானா பலதிங்கலுக்கு என்ன ஆனது ? என்பதை அம்மா, மகனின் உணர்வுப்பூர்வமான பயணமாக சொல்வது தான் ‘பாலன்’.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல், வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மன போராட்டத்தையும், அச்சத்தையும் தன் கண்களின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் ஒருவித குற்ற உணர்ச்சியிலும், அச்சத்திலும் பயணிக்கும் அவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர், அம்மாவுக்கு இணையாக தன் உணர்வுகளை கண்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பவர், எந்த ஒரு இடத்திலும் தான் யார் ? என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மவுனமாக இருந்தாலும், தன் அம்மாவின் தேடலையும், ஏமாற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி கனவம் ஈர்க்கிறார்.

வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் ஜினன், பிரிந்த அம்மாவை தேடும் பயணத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவலராக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால், பழிவாங்கும் தன் உணர்ச்சியை கச்சிதமாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸின், திரை இருப்பு மற்றும் வித்தியாசமான தோற்றம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிரிஷ் ஏ.டி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வு.

ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், முதன்மை கதாபாத்திரத்தின் வடிவமைப்பு போல், அமைதியான சூழல்களில் காட்சிகளை படமாக்கி, லொக்கேஷன்களையும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார்.

சுஷின் ஷாம் இசையில் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் அழுந்தங்கள் மற்றும் பரபரப்பை அதிகரிக்கச் செய்கிறது.

எளிமையான கதை, சாதாரணமான கதாபாத்திர வடிவமைப்பு என்றாலும், படத்தின் துவக்கத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்து விடும் வித்தையை படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் சிறப்பாக செய்திருக்கிறார்.

போகும் இடம் தெரியாத ஒரு பயணம், அதில் நிகழும் பிரிவு என்று மிக எளிமையான கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் கதையாசிரியர் ஜித்து மாதவன், பரபரப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் கவர்ந்து விடுகிறார்.

’மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றியை தொடர்ந்து சிதம்பரம் இயக்கியிருக்கும் இப்படம், துவக்கம் முதல் இறுதி வரை இறுக்கமான கதாபாத்திரங்கள் மற்றும் அமைதியான சூழல்களோடு பயணித்தாலும், யூகிக்க முடியாத திருப்பங்களோடு சுவாரஸ்யமான படமாக நகர்வதோடு, சிறந்த திரை உணர்வை கொடுக்கும் படைப்பாகவும் பயணிக்கிறது.

மொத்தத்தில், ‘பாலன்’ பாராட்டுக்குரியவர்.

ரேட்டிங் 4/5

balan movie reviewbalan reviewmalayalam movie balan reviewtamil movie balan reviewதமிழ்ப் படம் பாலன் விமர்சனம்பாலன் திரைப்பட விமர்சனம்பாலன் விமர்சனம்மலையாளப் படம் பாலன் விமர்சனம்