’எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்

போலீஸ் டி.எஸ்.பியான அதிதி பாலன், தனது பணி மாறுதலை தொடர்ந்து புதிய இடத்திற்கு பொறுப்பேற்க செல்லும் போது, துஷாரா விஜயனால் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்படுகிறார். பிறகு அதிதி பாலன் பெயரில் துஷாரா விஜயன், டி.எஸ்.பியாக பதவி ஏற்றுக்கொள்வதோடு, அந்த இடத்தில் நடக்க இருக்கும் அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

அதிதி பாலன் மூலமாக அந்த மோசடி நடக்க இருப்பதாக நினைத்து அவரை கடத்தி அடைத்து வைக்கும் துஷாரா விஜயனுக்கு, அவருக்கும் மேலே ஒருவர் இருப்பதும், கண்ணுக்கு தெரியாத அந்த நபர் மூலம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பகடைக்காய்களாக பயனபடுத்தப்பட்டு, அவர்கள் மூலம் மோசடி நடக்க இருப்பதும் தெரிய வருகிறது.

அந்த கண்ணுக்கு தெரியாத நபர் யார் ?, அவர் மூலம் நடக்க இருக்கும் மோசடியையும், அதன் பின்னணியையும் துஷரா விஜயன், கண்டுபிடித்தாரா? இல்லையா ? என்பதை இதுவரை திரையில் சொல்லப்படாத உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சொல்வதே ‘எக்ஸாம்’.

நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றவும், சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறவும் அரசு பதவிகளும், பணியும் மிக முக்கியமானது. அதற்காக கடுமையாக உழைக்கும் அவர்களது உழைப்பு பதவி ஆசைக்காகவும், அதிகார போதைக்காகவும் பணம் படைத்தவர்களுக்காக, எப்படி திருடப்படுகிறது என்பதை அரசு தேர்வுகளில் நடக்கும் பெரும் மோசடிகள் மூலம் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

இணையத் தொடர்கள் என்றாலே, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் பாணியிலான கதைகளை மட்டுமே விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல முடியும், என்ற கண்ணோட்டத்தை உடைத்து, சமூகப் பிரச்சனைகளை பேசும் கதைகளை கூட விறுவிறுப்பான இணையத் தொடராக கொடுக்க முடியும், என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் சற்குணம், பல உண்மை சம்பவங்களை மிக தைரியமாக காட்சிப்படுத்தி அரசு எந்திரத்தின் கோளாறுகளை மிக நுணுக்கமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் இருவரும் தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள். துஷாரா விஜயனின் அழுத்தமான நடிப்பு, அரசு பணிக்காக கடுமையாக படித்தும் பலன் பெறாமல், பணம் மற்றும் அதிகாரத்திற்கு முன்பு தோற்றுப்போகும் ஏழை மக்களை பிரதிபலித்திருக்கிறது.

அதிதி பாலன், பணம் இருந்தால் எதையும் குறுக்கு வழியில் சாதிக்க முடியும், என்ற எண்ணத்தில் வாழும் மேல்தட்டு மக்களின் மனநிலையை தன் நடிப்பில் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.

அரசு தேர்வு மற்றும் காவல்துறையை சார்ந்த கதை என்பதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களாக பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களது நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சப் இன்ஸ்பெக்டர் செழியன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். கதையின் மிக முக்கியமான கதாபாத்திரமாகவும், திரைக்கதையின் திருப்பமாகவும் பயணப்பட்டிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஆரம்பத்தில் ஏதோ செய்யப் போகிறார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திடீரென்று காணாமல் போனாலும், கிளைமாக்ஸில் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெற்று விடுகிறார்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் மிக நேர்த்தியாக இருக்கிறது. கதை முழுவதும் மலைப்பிரதேசத்தில் நடப்பதால் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயணித்திருக்கிறது. படத்தொகுப்பும் திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தி செல்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சற்குணம், தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசு தேர்வு மோசடிகளையும், அதன் பின்னணியையும் உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார். இத்தகைய மோசடிகள் எப்படி நடக்கிறது ?, யார் மூலமாக நடக்கிறது ?, என்பதை மிக விரிவாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சற்குணம், இத்தகைய மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தீர்வை சொல்லவில்லை என்றாலும், இதனால் நடுத்தர மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மனதுக்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

முதல் மூன்று அத்தியாயசங்கள் நம் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுவது போல், அடுத்தடுத்த அத்தியாயங்கள் இல்லாதது சிறு குறையாக இருந்தாலும், இதுவரை சொல்லப்படாத மற்றும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான பிரச்சனைனையை எந்தவித சமரசமும் இன்றி சொல்லியிருக்கும் இயக்குநர் சற்குணம், அதை ஒரு சுவாரஸ்யமான இணையத் தொடராக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ‘எக்ஸாம்’ குழுவினர் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று விட்டனர்.

ரேட்டிங் 3.5/5

adithi balandusharaja vijayanexam reviewexam web series reviewsarkunamtamil web series examஅதிதி பாலன்எக்ஸாம் இணையத் தொடர் விமர்சனம்எக்ஸாம் விமர்சனம்சற்குணம்துஷாரா விஜயன்புஷ்கர் காயத்ரி