சிலை கடத்தல் கூட்டத்தை அழிப்பதோடு, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த தனது மகனை ரஜினிகாந்த் சுட்டுக் கொள்வதோடு ‘ஜெயிலர்’ படம் முடியும். அதன் தொடர்ச்சியான இந்த கதையில், சிலை கடத்தல் கும்பலின் முழு நெட்வொர்க்கையும், அவர்களின் பெரும் தலையையும் அழிக்க முடிவு செய்யும் ரஜினிகாந்த், அதற்கான பயணத்தை மேற்கொள்கிறார். அதே சமயம், வர்மாவை கொலை செய்தவர் யார் ? என்பதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் எஸ்.ஜே.சூர்யா, அதற்கான அதிரடி பயணத்தை தொடங்குகிறார்.
இருவரது தேடல் பயணங்கள் யார் யார்க்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, என்பதை விறுவிறுப்பாக மட்டும் இன்றி நகைச்சுவையாகவும் சொல்வது தான் ‘ஜெயிலர் 2’.
வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இரண்டாம் பாகம் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை, என்ற விதியை உடைத்து முதல் பாகத்தை காட்டிலும், நகைச்சுவை, திரைக்கதை, காட்சியமைப்புகள், மாஸ் என அனைத்திலும் இரண்டு மடங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறது ‘ஜெயிலர் 2’.
கதைக்களத்திற்குத் தேவையான பக்குவப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த், தனது பிரமாண்டமான திரை இருப்பு மற்றும் மாஸ் ஸ்டைலால் முழுப் படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். அமைதியானப் பேச்சு, அலட்டல் இல்லாத உடல் மொழி, அளவான நடிப்பு என்று தனது கதாபாத்திரத்தை மென்மையாக கையாண்டிருக்கும் ரஜினிகாந்தின், ஒவ்வொரு அசைவுகளும் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்து விடுகிறது. காமெடி நடிகர்களை நடிக்க வைத்து விட்டு, தனது ரியாக்சன் மூலமாகவே பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கும் ரஜினிகாந்த், தனது வழக்கமான சில பாணிகளை சரியான இடத்தில் வெளிப்படுத்தி தன் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.
முதல் பாகத்தின் வர்மா கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, தனது மிரட்டலான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, பல இடங்களில் காமெடி சரவெடியை பற்ற வைக்கும் தீயாக பயன்பட்டிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன் ஆகியோரது திரை இருப்பு படத்தின் பிரமாண்டத்தை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
யோகி பாபு மற்றும் நமோ நாராயணன் கூட்டணி காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. முதல் பாதி படத்தை தங்களது காமெடி காட்சிகள் மூலம் தாங்கிப் பிடிக்கும் இவர்களது கூட்டணி வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு சத்தம் திரையரங்கையே அதிர வைக்கிறது.
ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதை திரையில் காட்டியிருக்கிறார். கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசை திரைக்கதை மற்றும் காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பை அதிகரித்திருப்பதோடு, மாஸ் காட்சிகளுக்கு கூடுதல் மெருகேற்றியிருக்கிறது.
ஆரம்பம் முதல் முடிவு வரை, எந்த ஒரு இடத்திலும் சிறிது கூட தொய்வின்றி படம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் ஆர்.நிர்மல், இயக்குநரின் கதை சொல்லல் முறையை சரியாக புரிந்து பணியாற்றியிருக்கிறார்.
ஒரு சாதாரண ஒன்லைன் என்றாலும், அதற்கான திரைக்கதையில் மாஸ், பிரமாண்டம், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் சேர்த்து முழுமையான பொழுதுபோக்குப் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்தை எப்படி கையாள்வது என்பதை சரியாக கணித்து பணியாற்றியிருக்கிறார்.
படம் முழுவதும் முன்னணி நடிகர்கள் பலர் சிறப்பு தோற்றத்தில் வருவதும், அவர்களை சரியான இடத்தில் பயன்படுத்தி, அவர்களுக்கான மாஸ் காட்சிகளை மிக சிறப்பாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், பார்வையாளர்களின் முழு கவனத்தையும் திரையின் பக்கம் இழுக்கும் வித்தையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
சிறு சிறு வசனங்களை கூட குபீரென்று சிரிக்கும்படி கையாண்டிருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சினிமா என்பது காட்சி மொழி என்பதை தனது ஒவ்வொரு ஃபிரேமிலும் நிரூபித்து, ரஜினிகாந்த் ரசிகர்களை மட்டும் இன்றி, பொழுதுபோக்கு படங்களை பார்க்க விரும்பும் அனைவரையும் முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஜெயிலர் 2’ மக்கள் மனதை சிறைபிடிப்பது உறுதி.
ரேட்டிங் 4.5 / 5