’மக்கள் தலைவா’ திரைப்பட விமர்சனம்

எந்த வேலைக்கும் செல்லாமல், சோம்பேரியாக ஊர் சுற்றிக்கொண்டு, போலியான போராட்டங்கள் மூலம் கிடைக்கும் பணத்தால் வாழ்க்கையை ஓட்டும் ரவி மரியாவுக்கு, பெரும் செல்வந்தரான ராதாரவி மூலம் அதிஷ்ட்டம் அடிக்கிறது. தன் பணத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் விளையாட்டு விளையாட திட்டம் போடும் ராதாரவி, அதற்காக ரவி மரியாவை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, ரவி மரியாவை சினிமாவில் நாயகனாக்குகிறார். பிறகு அவரது தலைமையில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்குகிறார்.

ராதாரவி சொல்வதை கேட்டு அப்படியே செய்யும் ரவி மரியா, அவரது திட்டத்தின்படி மக்களுக்கு சேவை செய்வதை காட்டிலும், போலியான விளம்பரங்கள் மூலம் மக்களிடம் எளிதில் சென்றடைவதோடு, குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் தலைவராக உருவெடுக்கிறார்.

தேர்தல் நாள் நெருங்கும் போது ராதாரவியும் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள, ரவிமரியா விபத்தில் சிக்கி மேல் சிகிச்சைகாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறார். இதனால், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்ற கேள்வி எழுகிறது. அப்போது ராதாரவி எடுக்கும் ஒரு அதிரடி முடிவு, தமிழகத்தின் அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட, அதன் மூலம் எத்தகைய விளைவுகள் ஏற்படுகிறது, ராதாரவியின் இந்த அரசியல் விளையாட்டுக்கான காரணம் என்ன, என்பதை சமக்கால அரசியலை நையாண்டி செய்யும் விதத்தில் சொல்வது தான் ‘மக்கள் தலைவா’.

வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் ரவி மரியா, கதையின் நாயகனாக தனக்கான பணியை குறையின்றி செய்திருக்கிறார். காதல் பாடல், அரசியல் மேடை பேச்சு, என்று இதுவரை பார்க்காத ரவி மரியாவை திரையில் பார்க்க முடிகிறது. நடிப்பில் எந்தவித மாற்றமும் வெளிக்காட்டவில்லை என்றாலும், தான் ஏற்ற தமிழ் குடிமகன் என்ற கதாபாத்திரத்தை எந்தவித குறையும் இன்றி கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

உலகளவில் முன்னணி வெளிநாட்டு நிறுவனத்தின் உயரிய பதவியில் இருக்கும் தமிழர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி, பணமும், அதை எப்படி பயன்படுத்தினால் நாம் நினைத்தது நடக்கும் என்ற அறிவும் இருந்தால், அரசியலில் எளிதில் வெற்றி பெறலாம் என்ற உண்மைக்கு தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

தற்போதைய நவீன் தொழில்நுட்ப காலக்கட்டத்தில், பழமையான அரசியல் பாதையில் பயணிக்கும் அரசியல்வாதிகளின் அவலநிலையையும், அவர்களால் அபாயக் கட்டத்தில் சிக்கும் அரசியல் கட்சிகளின் பரிதாப நிலையையும் வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பழ கருப்பையா, தன் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பின் மூலம் சிரிக்க வைக்கிறார்.

பெட்டி வாங்கும் நடுநிலை அரசியல்வாதிகளின் அடையாளமாக நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத், நாயகனின் நண்பர் என்பதால் அமைச்சராகும் அதிஷ்ட்டம் பெற்ற கஞ்சா கருப்பு, மற்றொரு நண்பராக நடித்திருக்கும் அக்னி எஸ்.வருண், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை தட்டிக்கேட்கும் ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு, யூடியுபராக நடித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் ரங்கநாதன், கதாநாயகி என்ற பெயரில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் வந்து போகும் அக்‌ஷரா விஜய் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ்.நாயர், தன்னிடம் இருக்கும் வசதிகளை வைத்து காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார். குறிப்பிட்ட ஒரு லொக்கேஷன் என்றாலும் அதை வெவ்வேறு கோணத்தில் படமாக்கி வித்தியாசத்தை காட்டியிருப்பவர், எளிமையான இடங்களை கூட ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

துளசிராமன் இசை மற்றும் வரிகளில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்களோடு கேட்க வைக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

அதிகமான வசன காட்சிகள் இருந்தாலும் காட்சிகளின் நீளத்தை குறைத்து, முழு படத்தின் நீளத்தை இரண்டு மணி நேரத்திற்குள் அடக்கிய படத்தொகுப்பாளர் துர்கேஷை பாராட்டலாம்.

தற்போதைய தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் புதியவர்களின் வருகையை கதைக்களமாக கொண்டு திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ராம்தேவ், வெற்றி பெற்றவர்களின் பின்னணியில் நடந்த அரசியல் வியாபாரத்தை தைரியமாக சொல்லியிருக்கிறார்.

கதையும், காட்சிகளும் கற்பனை என்றாலும், தற்போதைய காலக்கட்ட அரசியல் சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருப்பது படத்தை சுவாரஸ்யமாக பயணிக்க வைத்தாலும், சில இடங்களில் தான் சொல்ல வந்ததை மறந்து, படத்தில் தான் நடித்த கதாப்பாத்திரம் போல் இயக்குநர் ராம்தேவ் குழப்பமடைந்திருப்பது திரைக்கதையின் திருப்பத்தில் தெரிகிறது.

பல அரசியல் நையாண்டி படங்களை பார்த்திருக்கும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு, தற்போதைய அரசியல் மாற்றத்தை நையாண்டியாக சொல்லி சிரிக்க வைப்பதோடு, சிந்திக்க வைக்கவும் முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்தேவ், திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அம்மாவாசை அரசியல் போல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில், ’மக்கள் தலைவா’ மக்கள் மனதில் நிற்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ரேட்டிங் 2.8/5

makkal thalaiva movie reviewmakkal thalaiva reviewtamil movie makkal thalaiva reviewதமிழ்ப் படம் மக்கள் தலைவாமக்கள் தலைவா திரைப்பட விமர்சனம்மக்கள் தலைவா விமர்சனம்