‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட விமர்சனம்

சென்னையில் காவலராக பணியாற்றும் நயன்தாராவை சுற்றி பல அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது. அதன் பின்னணி குறித்து அறிவதற்காக மயிலாஞ்சி என்ற ஊருக்கு செல்லும் நயன்தாராவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்வதோடு, அவர் தான் மூக்குத்தி அம்மன் என்ற உண்மையும் தெரிய வருகிறது. அதே சமயம், மூக்குத்தி அம்மனை பழிவாங்குவதற்காக அதே ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதியடைந்த சாத்தான் ரெஜினா கசன்ட்ராவும் உயிர்த்தெழுகிறார்.

தான் ஒரு அம்மன் என்பதை அறியாமல், தன்னை சுற்றி நடக்கும் மர்மத்தின் ரகசியத்தை அறிந்துக் கொள்ள நயன்தாரா முயற்சிக்க, அவரை அழிக்க ரெஜினா கசண்ட்ரா முயற்சிக்கிறார். இறுதியில், வென்றது சாத்தானா அல்லது தெய்வ சக்தியா ? என்பது தான் ‘மூக்குத்தி அம்மன் 2’-வின் கதை.

’மூக்குத்தி அம்மன்’ படத்திற்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கும் நயன்தாராவை தவிர வேறு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. முற்றிலும் புதிய கதையாகவும், களமாகவும் உருவாகியிருக்கும் இதில் காட்சி மொழியின் மூலம் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

காவலராக எளிமையாகவும், இயல்பாகவும் நடித்து கவனம் ஈர்க்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் அமைதியாக மட்டும் இன்றி ஆக்ரோஷமாகவும் நடித்து மிரட்டியிருக்கிறார்.

மூக்குத்தி அம்மனை அழிக்க துடிக்கும் சாத்தானாக நடித்திருக்கும் ரெஜினா கசன்ட்ரா, கம்பீரமான அழகியாக வலம் வந்து கவர்வதோடு, நடிப்பு ராட்ச்சசியாகவும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

ரெஜினா கசன்ட்ரா கணவராக நடித்திருக்கும் துனியா விஜய், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

நயன்தாராவின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி மற்றும் யோசி பாபு கூட்டணியின் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.

மைனா நந்தினி, கருடா ராம், அபிநயா, ஸ்ருதி.எஸ், சிங்கம்புலி, வி.ஆர்.சுவாமிநாதன், சிவகுமார்.எஸ், சுனில் வர்மா ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அம்மன் அருளை வழங்கும் வகையில் இருப்பதோடு, பின்னணி இசை படம் பார்ப்பவர்களையும் சாமியாட்டம் போட வைக்கிறது.

ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு கதை சொல்லலில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் அதை சரிசெய்து படத்துடன் பார்வையாளர்களை பயணிக்க வைத்து விடுகிறது.

வெங்கட் ராகவனின் திரைக்கதை மற்றும் வசனம், பழைய பாணியிலான ஆன்மீக படங்களை நினைவுப்படுத்தினாலும், தற்போதைய தொழில்நுட்பத்தால் அதை மறக்கடித்து புதிய கதைக்களத்துடன் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்து விடுகிறது.

பெரும் நட்சத்திர கூட்டம் இருந்தாலும், யார் யாரை எப்படி பயன்படுத்துவது என்பதில் மிக தெளிவாக இருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, திரையில் பார்த்து கொண்டாடக்கூடிய படமாக இயக்கியிருக்கிறார்.

தற்போதைய காலக்கட்டம் மற்றும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம் என்று கதை இரண்டு விதமான காலக்கட்டங்களில் சொல்லப்பட்டாலும், மூக்குத்தி அம்மனையும், அவர் நிகழ்த்தும் அதிசயங்களையும் காலத்திற்கு ஏற்ப காட்சிப்படுத்தி பக்தியாளர்களை படம் பரவசமடைய செய்கிறது.

ஆன்மீகமும், அம்மனும் நிறைந்திருந்தாலும், நகைச்சுவையையும் அதே அளவுக்கு வைத்து, ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக கொடுத்து குடும்ப ரசிகர்களுக்கு கொண்டாட்டமான மனநிலையை கொடுத்திருக்கும் இயக்குநர் சுந்தர்.சி-யின் வெற்றி பாகங்களான ‘அரண்மனை’ போல் இந்த அம்மன் படமும் தொடர் வெற்றிகளை பெறுவது உறுதி.

மொத்தத்தில், ‘மூக்குத்தி அம்மன் 2’ மக்களிடம் அமோக வரவேற்பு பெறும்.

ரேட்டிங் 3.5/5

mookuthi amman 2 movie reviewmookuthi amman 2 reviewtamil movie mookuthi amman 2 reviewதமிழ்ப் படம் மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்மூக்குத்தி அம்மன் 2 திரைப்பட விமர்சனம்மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்
Comments (0)
Add Comment