’நூறு கோடி வானவில்’ திரைப்பட விமர்சனம்

கோவாவில் சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றி வரும் நாயகி சித்தி இத்னானி, அறியாத வயதில் ஏற்பட்ட காதலுக்கு உண்மையாக இருக்கிறார். அவரது காதலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தாலும், தன் ஒவ்வொரு நாட்களையும் காதலரின் நினைவுகளோடு கடந்து செல்கிறார்.

பணி நிமித்தமாக கோவா வரும் மும்பை இளைஞர் ஹரிஷ் கல்யாணுக்கு சித்தி இத்னானியின் நட்பு கிடைக்கிறது. சித்தி இத்னானியின் காதல் பற்றி தெரிந்தாலும், அவர் மீது ஹரிஷ் கல்யாணுக்கு காதல் மலர்கிறது. தன் மீதான காதலுக்கு மட்டும் இன்றி, தனது கனவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஹரிஷ் கல்யாணின் செயலாலும், அக்கறையாலும் ஈர்க்கப்படும் சித்தி இத்னானி, தனது முந்தைய காதலை நினைத்து, ஹரிஷ் கல்யாணிடம் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறார். அதே சமயம், சித்தி இத்னானிக்கு தன் மீது இருக்கும் காதலை வெளிக்கொண்டு வர ஹரிஷ் கல்யாண் முயற்சிக்கிறார். இவர்களது இத்தகைய பயணத்தால் ஏற்படும் உணர்ச்சிகரமான போராட்டத்தை, உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் ‘நூறு கோடி வானவில்’.

இளமைக்கே உரிய வேகம், பிடிவாதம், காதலில் ஏற்படும் தடுமாற்றம் என பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண், தன் தந்தை மீதான வெறுப்பையும், தாய் மீதான ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

அறியாத வயதில் ஏற்பட்ட காதல் என்றாலும், அதன் மீதான் நம்பிக்கை, அதை காப்பாற்றுவதற்காக மனதுக்குள் நடத்தும் உணர்வு ரீதியான போராட்டத்தை, கண்களின் மூலமாகவே வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி, சிறப்பான பங்களிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார்.

சித்தி இத்னானியின் காதலராக நடித்திருக்கும் ரினிலின் செயற்கைத்தனமான நடிப்பு, அந்த கதாபாத்திரத்தின் மீதான முக்கியத்துவத்தை குறைத்து விடுவதோடு, அந்த கதாபாத்திரத்தின் பயணமும், முடிவும் எப்படி இருக்கும், என்பதை எளிதில் யூகித்து விட முடிகிறது.

விஜே பார்வதியின் பட பட பேச்சும், துறு துறு செயலும் நகைச்சுவை காட்சிகளுக்கு கைகொடுத்திருப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது. கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்தி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பழமையும் புதுமையும் கைகோர்த்து நிற்கும் கோவாவின் தனித்துவத்தை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரசன்னா கே.குமார், காதலர்களின் உனர்வுகளை பார்வையாளர்கள் மனதில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

சித்து குமாரின் இசையில் மெட்டுக்களும், வரிகளும் இணைந்து காதலுக்கு அழகிய இசை வடிவத்தை கொடுத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் காதல் உணர்வுகளையும், சொல்லப்படாத ஏக்கங்களையும், மனதுக்குள் மறைந்திருக்கும் மகிழ்ச்சியையும் தன் பின்னணி இசை மூலம் திரையில் பயணிக்க வைத்திருக்கிறார்.

காதல் உணர்வுகள் மற்றும் காதலர்களின் மனப் போராட்டங்கள் பற்றி கதை பேசினாலும், திரைக்கதை தொய்வின்றி நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் எம்.சுபராக்.

வார்த்தைகளால் சொல்லாத காதலில் தொடங்கி, மறுமணம் மூலம் மனதில் ஏற்படும் முதிர்ச்சியான மற்றும் ஆழமான காதல், என தனது ஒவ்வொரு படங்களிலும் காதல், அதனால் மனதுக்குள் ஏற்படும் போராட்டங்களை, உணர்வுப்பூர்வமாக பேசும் இயக்குநர் சசி, இதில், ஒரு பெண் மனதில் ஏற்படும் காதல் குழப்பத்தையும், அதனால் ஏற்படும் மனப் போராட்டத்தையும் கவித்துவமாய் பேசியிருக்கிறார்.

காதலுக்கும், காதலருக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்குப் பிடித்தமானவற்றையும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளையும் இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் நிலையை தன் எழுத்து மூலமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சசி, அந்த பெண்ணின் மனம் சட்டென்று மாறுவதற்காக சொன்ன காரணங்களும், அதை காட்சிப்படுத்திய விதமும் திரைக்கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், பெண் கதாபாத்திரத்தை கையாண்ட விதமும், அதன் மூலம் பெண்களின் மனங்களையும், அவர்களது மெளனங்களையும் பிரதிபலித்திருப்பது பாராட்டுக்குரியது.

காதல் என்பது ஒருமுறை வருவது என்பதும், ஒருவர் மனதில் ஒருவருக்குத்தான் இடம் என்பதும் போலியானது, என்பதை காட்சி மொழியிலும், கண்கள் பேசும் மொழியிலும் மிக சிறப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் சசி, காதல் என்பது மனம் சம்மந்தப்பட்டது, என்பதை திருநம்பி கதாபாத்திரம் மூலம் மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், பாராட்டும்படி சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘நூறு கோடி வானவில்’ ரசிக்க வைக்கும்.

ரேட்டிங் 3.5/5

nooru kodi vaanavil movie reviewnooru kodi vaanavil reviewtamil movie nooru kodi vaanavil reviewதமிழ்ப் படம் நூறு கோடி வானவில் விமர்சனம்நுறு கோடி வானவில் விமர்சனம்நூறு கோடி வானவில் திரைப்பட விமர்சனம்
Comments (0)
Add Comment