Take a fresh look at your lifestyle.

’அங்கீகாரம்’ திரைப்பட விமர்சனம்

61

சென்னையின், குடிசைப் பகுதியில் வாழும் நாயகன் கே.ஜெ.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகிறார். விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில், ஓட்டப்பந்தய விளையாட்டில் அதீத ஈடுபாடு காட்டி வரும் அவர், விளையாட்டு வீரருக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றாலும், தேசிய அளவிலான போட்டியில் சாதனை புள்ளிகளோடு சாம்பியன் பட்டம் வென்று காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகிறார்.

ஆனால், மோசடிகள் நிறைந்த தேசிய தடகளச் சங்கம் அவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. எப்படியாவது சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க துடிக்கும் அவர் மாநில விளையாட்டுத் துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் என்று பல இடங்களில் முறையிட்டாலும், பயன் இல்லாமல் போகிறது.

அனைத்து தகுதிகளும் இருந்தும், தனக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கே.ஜெ.ஆர், வழக்கறிஞர் இல்லாமல் தனது பிரச்சனைக்கு தானே வாதிட்டு, விளையாட்டுத் துறையில் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லைய ?, என்பதை தகுதி இருந்தும் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போன விளையாட்டு வீரர்களின் மன குமுறல்களாக பிரதிபலிப்பதே ‘அங்கீகாரம்’.

நாயகனாக நடித்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர், தடகள வீரருக்கான உடல்மாற்றத்தை வியக்கும்படி மேற்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியை செய்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. அதேபோல், நடிப்பிலும் கொஞ்சம் பயிற்சி எடுத்திருந்தால் ஒரு நடிகராகவும் வியக்க வைத்திருக்கலாம். ஆனால், மனுஷன் உடற்பயிற்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், நடிப்பில் கவனம் செலுத்தாமல் அனைத்துக் காட்சிகளிலும் ஒரே மாதிரியான ரியாக்‌ஷன்களோடு வலம் வருகிறார். அதே சமயம் அவருக்கு நடிப்பதைவிட, அதிகமான வசனம் பேசுவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் என்றாலும், அந்த குறைவான வாய்ப்பில் கூட அவரது நடிப்பின் குறை அப்பட்டமாக தெரிகிறது.

அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் விஜி வெங்கடேஷ், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இசபெல்லா, தடகள விளையாட்டுப் பயிற்சியாளராக நடித்திருக்கும் வசுந்தரா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகனின் தோழியாக தடக வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி, தேசிய தடகள சங்கத்தின் தலைவராக நடித்திருக்கும் ஷான், மாநில விளையாட்டுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், விளையாடுத்துறை அமைச்சராக நடித்திருக்கும் மன்சூர் அலிகான், நீதிபதிகளாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் படத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக பயணித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் முகத்தில் செயற்கைத்தனம் தெரிந்தாலும், காட்சிகளில் தெரியக் கூடாது என்பதற்காக ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத், சென்னையின் குடிசைப் பகுதிகளில் நேரடியாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார். தடகள போட்டியை எதார்த்தமாக காட்சிப்படுத்துவதை விட கிரீன் மேட் அதிகம் பயன்படுத்தியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதே சமயம், இரண்டாம் பாதி முழுவதும் நீதிமன்ற வளாகத்தில் நகர்வதால், ஒளிப்பதிவாளர் தனது தனித்தன்மையை காட்ட முடியாமல் தடுமாறியிருக்கிறார்.

ஜிப்ரான் வைபோதா இசை படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. கதை மாந்தர்களின் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கும் பின்னணி இசை, படம் முழுவதும் அளவாக பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் தினேஷ் குமாருக்கு பெரிய சவால் நிறைந்த பணி இல்லை என்றாலும், திரைக்கதை தொய்வின்றி நகர்வதற்கு ஏற்ப காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் தென்பாதியான், தமிழகத்தில் மட்டும் அல்ல இந்திய அளவில் விளையாடுத்துறையில் நடக்கும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டிருப்பதோடு, கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை ஏன் ? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

சட்டம் மூலம் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு போராடும் ஒரு சாமானியனின் குரலை நீதிமன்றம் இவ்வளவு பொறுமையாக கேட்குமா ?, அதுவும் வழக்கறிஞர் இன்றி அவரே வாதிடுவதோடு, பல மோசடிகள் குறித்து ஆதாரப்பூர்வமாக விவரிப்பதை கூட அமைதியான முறையில் கேட்கும், என்பதெல்லாம் சினிமாத்தனமாகவே தெரிகிறதே தவிர உண்மைக்கு நெருக்கமானதாக இல்லை.

நீதிமன்ற வாதங்கள் சினிமாத்தனமாக பயணித்தாலும், ஒரு விளையாட்டு வீரரின் சாதனைப் பயணத்தை மட்டுமே கதையாக்கி காட்சிப்படுத்தி வரும் திரைப்படங்களுக்கு மத்தியில், ஆட்சியாளர்களின் அலட்சியம், பொறுப்பில்லாத அதிகாரிகள், விளையாட்டை வளர்க்க வேண்டிய சங்கங்கள் அதை எப்படி சாகடிக்கின்றது என்ற உண்மை, ஆகியவற்றை அழுத்தமாக பதிவு செய்து, பல சோதனைகளை கடந்தாலும் சாதனைக்கு அருகில் செல்ல முடியாமல் துவண்டு போகும் பல தகுதியான விளையாட்டு வீரர்களின் மன வலியை மக்களின் மனதுக்குள் கடத்தியதில் இயக்குநர் தென்பாதியான் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ’அங்கீகாரம்’ படத்திற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

ரேட்டிங் 3/5