Take a fresh look at your lifestyle.

ஏவிம் நிறுவனத்தின் ’ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’!

21

இந்திய திரைத்துறையில் முன்னணி நிறுவனமான திகழ்ந்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில், ’ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ‘கன்வென்ஷன் சென்டர்’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான பிரமாண்ட அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பார்க்கிங் வசதியுடன் கூடிய இந்த அரங்கத்தின் கூடுதல் சிறபம்சமாக, சைவம் மற்றும் அசைவம் சமயலுக்கான தனி தனி சமயலறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் பல முன்னோடி சாதனைகளையும் புதுமைகளையும் நிகழ்த்தியுள்ளோம். பின்னணிப் பாடகர் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய ‘நந்தகுமார்’ (1938), இந்தியத் திரைப்பட உலகில் முதல் மொழிமாற்றுப் படமான ‘ஹரிச்சந்திரா’ (1944), உதட்டசைவுக்கு ஏற்ப பாடலைப் பொருத்தும் post lip synchronisation தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘ஸ்ரீ வள்ளி’ (1945), மகாகவி பாரதியார் பாடல்களை உரிமையாளரிடம் ஏவி. மெய்யப்பன் அவர்கள் வாங்கி திரைப் படத்தில் பயன்படுத்தியது ‘நாம் இருவர்’ (1947), அரசின் வேண்டுகோளை ஏற்று தன்னிடம் உள்ள பாரதியார் பாடல்களின் உரிமையை பெருந்தன்மையாக அரசுக்கு நன்கொடையாக ஏவிஎம் வழங்கியது (1949), பாடல்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம் ‘அந்த நாள்’ (1954), குழந்தைகளுக்கான திரைப்படத்திற்காக ஜவஹர்லால் நேரு தேசிய தங்கப் பதக்கத்தை வென்ற ‘ஹம் பஞ்சி ஏக் டால் கே’ (1957), எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்த ‘மெல்லத் திறந்தது கதவு’ (1986), ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முழுமையான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படம் – ‘சம்சாரம் அது மின்சாரம்’ (1986), நடிகர்களையும் அனிமேஷனையும் ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ‘சிவாஜி’ (2007), இந்தியாவில் முதன்முதலாக Dolby Atmos தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ‘சிவாஜி 3D ’ (2012) போன்ற பல மைல்கற்களை எங்கள் நிறுவனம் படைத்துள்ளது.

மேலும், ஆறு முதலமைச்சர்கள் எங்கள் திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையையும் பெற்றுள்ளோம். அறிஞர் சி. என். அண்ணாதுரை ‘ஓர் இரவு’ (1951), Dr. கலைஞர் மு. கருணாநிதி ‘பராசக்தி’ (1952), Dr. எம். ஜி. இராமச்சந்திரன் ‘அன்பே வா’ (1966), Dr. என். டி. ராமாராவ், ஐந்து திரைப்படங்கள் (1954-1970), Dr. செல்வி ஜெ. ஜெயலலிதா, நான்கு திரைப்படங்கள் (1962-1970) மற்றும் திரு. சி. ஜோசப் விஜய் ‘வேட்டைக்காரன்’ (2009) ஆகிய திரைப்படங்கள் மூலம் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சினிமா வரலாறு மற்றும் பெருமையை கொண்டாடும் விதமாக 2023 ஆம் ஆண்டு, ’ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’-ஐ நாங்கள் தொடங்கினோம். அதில் கவனமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள், உபகரணங்கள், திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட ஹெரிடேஜ் கார்கள் மற்றும் அரிதான இயந்திர சாதனங்கள் என இந்த மியூசியம் பார்வையாளர்களுக்கு பெருமை வாய்ந்த வரலாற்றை உணரும் வாய்ப்பை கொடுக்கும்.

அடுத்த முயற்சியாக ’ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ என்ற அரங்கத்தை தொடங்கி உள்ளோம். பல்வகை நிகழ்ச்சிகளை நடத்த வசதியாகவும் தாராளமான பார்க்கிங் வசதியுடனும், பிரம்மாண்ட மேடை அமைப்புடனும் அமைத்து உள்ளோம்.

பொருட்காட்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், பெருநிறுவன அரங்க கூட்டங்கள், திரையுலக இசை வெளியீடு நிகழ்ச்சிகள், திருமண நிச்சயதார்தங்கள், திருமணம், திருமண வரவேற்பு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு இந்த சிறப்பு மிகுந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அரங்கங்களில் இல்லாத வசதியாக, அனைத்து மக்களும் பயன் பெரும் வகையில் சைவ மற்றும் அசைவ சமையலுக்கான தனி தனி அடுப்பறைகள் உள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.