’பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘தாய் கிழவி’ உள்ளிட்ட பல தரமான மற்றும் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம் தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘மிஸ்டர்.பாரத். அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாரத் நாயகனாக அறிமுகமாக, ‘டபுள் ஆக்குபன்ஸி’ பட நாயகி சம்யுக்தா விஸ்வந்த் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தராஜ, ஆதித்யா கதிர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக நடிகர்கள் என்றாலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தொடர்ந்து வெற்றி பெறும் நிலையில், ‘மிஸ்டர்.பாரத்’ திரைப்படம் அத்தகைய வெற்றி படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், படம் வெளியாவதற்கு முன்பாகவே எம்.ஜி அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.11 கோடி இந்த படத்தை விநியோகஸ்தர் பெற்றிருக்கிறார். படம் பார்த்த பிறகு தயாரிப்பாளர் சுதன் கேட்ட தொகைக்கு படத்தை முழுவதுமாக விநியோகஸ்தர் ஒருவர் வாங்கியிருப்பதால் படம் நிச்சயம் மக்களிடம் வரவேற்பு பெறும் படமாக அதான் இருக்கும், என்ற நம்பிக்கை திரையுலகினரிடம் ஏற்பட்டுள்ளது. படம் வெளியானால் மக்களும் கொண்டாடுவார்கள், என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் நிரஞ்சன் கூறுகையில், “ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் கதை இருக்கும். காதலித்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன், ஆனால் அவருக்கு பெண்களிடம் தன் காதலை சரியான முறையில் வெளிப்படுத்த முடியவில்லை. அதே சமயம், பெண்கள் அவரிடம் காதலை சொல்ல முயற்சிக்கும் போது, அதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தின் வாழ்வில் என்ன நடக்கிறது, என்பது தான் கதை. இந்த கதையில் மிக முக்கியமான நாயகனின் கதாபாத்திரம் தான். ஒரு ஜாலியான, எந்த விசயத்திற்கும் பெரிதாக ரியாக்ஷன் கொடுக்காத ஒருவராக இருப்பார். அவரை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள், அவர் மற்றவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். நகைச்சுவை என்றாலும் மற்றவர்களை உடல் ரீதியாக கேலி, கிண்டல் செய்யாமல், மிக நாகரீகமாக காட்சிகளை கையாண்டிருக்கிறோம்.
படத்தில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்த காட்சிகளும் இல்லை. சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்க்கும்படி படம் ஜாலியாக இருக்கும். படம் பார்த்த பிறகு உங்களுக்கு அது தெரியும். படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். எந்தவிதமான கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.” என்றார்.
நாயகன் பாரத் படம் குறித்து கூறுகையில், “நானும் இயக்குநர் நிரஞ்சனும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள், அப்போதே இருவரும் சேர்ந்து குறும்படங்கள் எடுத்திருக்கிறோம். இப்படி ஒரு கதாபாத்திரம் என்று நிரஞ்சன் சொல்லும் போதே மிக ஆர்வமாக இருந்தது, ரொம்பவே புதிதாகவும் இருந்தது. இப்படி ஒரு படத்தில் நான் ஹீரோவாக அறிமுகமாவது மகிழ்ச்சி. படம் நிச்சயம் குடும்பமாக பார்க்க கூடிய படமாக இருக்கும். நான், இசையமைப்பாளர், நாயகி என இந்த படத்தில் 6 பேர் அறிமுகமாகிறார்கள். அறிமுக நடிகர்களாக இருந்தாலும், நல்ல கதை இருந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. அப்படிப்பட்ட படம் தான் ‘மிஸ்டர்.பாரத்’. எந்த ஒரு இடத்திலும், எந்தவிதமான தவறான காட்சிகளும் இல்லை. குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பார்க்க கூடிய, சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் ஒரு படமாக தான் இருக்கும்.” என்றார்.

நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா விஸ்வநாத் படம் குறித்து கூறுகையில், “கச்சி சேரா பாடலை பார்த்து விட்டு தான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. என்னுடைய முதல் திரைப்படம் ‘மிஸ்டர்.பாரத்’. ஆனால், டபுள் ஆக்குபன்ஸி முன்பாகவே வெளியாகி விட்டது. இயக்குநர் என்னிடம் கதை சொன்னதோடு, கதாபாத்திரத்தின் தன்மை உள்ளிட்ட பல விசயங்களை வீடியோவாக காண்பித்தார். அவருடைய ஆர்வம், குழுவினரின் எனர்ஜி எனக்கு மிகவும் பிடித்து விட்டது, உடனே ஒப்புக்கொண்டேன். படம் முடிந்த பிறகும் நான் படக்குழுவினருடன் டச்சில் இருக்கிறேன், அந்த அளவுக்கு இந்த படக்குழுவினர் எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். வித்தியாசமான கேரக்டரான ஹீரோவை நான் எப்படி எதிர்கொள்கிறேன், என்பது தான் என் கதாபாத்திரம். மிகவும் எனர்ஜியான பொண்ணாக நடித்திருக்கிறேன்.
‘டபுள் ஆக்குபன்ஸி’ படத்தில் என்னுடைய ஆடை வடிவமைப்பு அதிகம் பேசப்பட்டது. ஆனால், நிஜத்தில் அப்படிப்பட்ட ஆடைகளை நான் அணிவதில்லை. இந்த படத்தில் அப்படி அல்ல, நான் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனோ அப்படி ஒரு கதாபாத்திரம் தான் எனக்கு கிடைத்திருக்கிறது. டபுள் ஆக்குபன்ஸி படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட லுக்கில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். ரொம்ப ஜாலியாக படப்பிடிப்பு போனது. படம் எப்படி ஜாலியாக இருப்பது போல், படக்குழுவினரும் ஜாலியாக பணியாற்றினார்கள். என்னால் மறக்க முடியாத படப்பிடிப்பாக ‘மிஸ்டர்.பாரத்’ அமைந்தது. நிச்சயம் இந்த படம் உங்கள் கவலைகளை மறக்கடித்து மகிச்சியை தரும்.” என்றார்.
தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் படத்தின் வியாபாரம் பற்றி கூறுகையில், “படம் சிறப்பாக வந்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலே மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக ‘மிஸ்டர் பாரத்’ இருக்கும். எம்.ஜி அடிப்படையில் படத்தை வாங்கியிருக்கிறார்கள். நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதியவர்களாக இருந்தாலும், படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் படத்தை உடனே வாங்கி விட்டார்கள். எம்.ஜி அடிப்படையில் ரூ.11 கோடிக்கு படத்தை வாங்கியிருக்கிறார்கள். தற்போதைய தமிழ் சினிமாவில் எம்.ஜி அடிப்படையில் வியாபாரம் நடப்பது அறிதாகிவிட்ட நிலையில், ‘மிஸ்டர்.பாரத்’ படத்திற்கான வியாபாரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் படமாக தான் இருக்கும்.” என்றார்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜி ஸ்குவார்ட் சார்பி லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரணவ் முனிராஜ் இசையமைக்க, திவாகர் டென்னிஸ் படத்தொகுப்பு செய்கிறார். பவன கோவர்தன் கலை இயக்குநராக பணியாற்ற, அசார் நடன காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கனல் வி.கண்ணன், சரவணன் குகன் ஆகியோர் சண்டைக்காட்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மிஸ்டர்.பாரத்’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.