ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றும் நாயகன் சனத்தும், ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண்ணான இமயாவும் நண்பர்களாக பழகுகிறார்கள். சனத் மீது இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க மறுக்கிறார். அதற்கான காரணமாக தனது முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி தனக்கு இல்லை என்கிறார். அவரது முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை சனத்தும் காதலிக்கிறார்.
இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிய சனத், விபத்து ஒன்றின் மூலம் தலையில் அடிபட்டு, தனது 6 வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனால், இமயா மற்றும் அவரது காதலை மறந்துவிடுவதோடு, காதலை முறித்துகொண்டு தன்னைவிட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலியின் பிரிவு சம்பவத்தையும் மறந்துவிடுபவர், பழைய நினைவுகளோடு தனது முன்னாள் காதலி மரோனா செபாஸ்டியனை சந்திக்க செல்கிறார்.
மறந்த நினைவுகள் திரும்பவும் வந்தவுடன், அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணிக்கும் இமயாவின் காதல் வெற்றி பெற்றதா? அல்லது முதல் காதல் முறிவு பற்றி தெரியாமல் பிரிந்து சென்ற காதலியை தேடிச் செல்லும் சனத்தின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இன்றி, ஒரு கதாபாத்திரமாகவே வலம் வந்திருக்கிறார். முதல் காதலியை உருகி உருகி காதலிப்பவர், அவரது பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், இமயா உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
மடோனா செபாஸ்டியன், காதலருக்கு இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் காட்சியிலும், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும் காட்சியிலும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை அழகியலோடு காட்சிப்படுத்தி கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.
ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெலோடி ரகம். பின்னணி இசை அளவு.
நினைவுகளை இழப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே திரைக்கதையில் ஆதிக்கம் செலுத்துவதால், காதலர்களின் உணர்வுகளும், அவர்களது வலியும் எந்த ஒரு காட்சியிலும் பிரதிபலிக்காதது, படத்தொகுப்பிலும் தெரிகிறது. எனவே இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விகரமன்.
எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார், காதல் கதை மூலமாக பார்வையாளர்களை உருக வைப்பதற்கு பதிலாக, நினைவுகளை இழந்த நாயகனின் காதல் கதைகளை காமெடியாக சொல்லி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.
பார்வையாளர்களை கவர்வதோடு, அவர்களது ஆழ் மனதில் இருக்கும் காதல் நினைவுகளை தட்டி எழுப்புவதற்கு காதலர்களின் உணர்வுப்பூர்வமான காட்சிகளே போதுமானது. ஆனால், இயக்குநர் கிஷோர் குமார், ஞாபக மறதி அல்லது நினைவுகள் இழப்பு என்ற பின்னணியோடு காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருப்பது, எந்தவிதத்திலும் பார்வையாளர்களை பாதிக்கவில்லை.
முன்னாள் காதல் மற்றும் இன்னாள் காதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடன் பயணிக்கும் நாயகனின் செயலும், இறுதியில் யாருடன் அவர் இணைவார் ? என்ற கேள்வியும் படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றாலும், மூன்று முதன்மை கதாபாத்திரங்களுக்கான கெமிஸ்ட்ரியில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய காதல் படங்களின் வரிசையில் இந்த படத்திற்கும் இடம் கிடைத்திருக்கும்.
மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ பொழுதுபோக்கு படமாக பார்வையாளர்களை திருப்திப்படுத்தினாலும், இதயத்தை தொடவில்லை.
ரேட்டிங் 3/5