Take a fresh look at your lifestyle.

’மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்

13

வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் மூன்று பேரும் நண்பர்கள் மட்டும் இன்றி, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் கேப்டனாக இருந்து ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற கிரிக்கெட் அணியை வழி நடத்துவதோடு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். அதன்படி, தங்களது கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இவர்களது அணி பங்கேற்று விளையாடி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் வீர் சிங் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தை வென்று, அதன் மூலம் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்கலாம் என்று திட்டம் போட, ஊர் தலைவரின் திடீர் மரணத்தால் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் நின்று விடுகிறது. இதனால், ஊர் தலைவரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டியின் ரன்னர் பரிசுத் தொகையை திருடி, அதை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க அனுப்பிவிடுகிறார்கள். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் மூன்று நண்பர்களும் சென்னைக்கு செல்ல, அவர்களுடன் வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியான லாவண்யா அன்பழகனும் செல்கிறார்.

தங்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருப்பவர்கள், தங்களிடம் இருக்கும் டிக்கெட் போலி என்று தெரிந்ததும் பேரதிர்ச்சியடைகிறார்கள். இருந்தாலும், எப்படியாவது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்துவிட்டு தான் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு எடுக்கும் நண்பர்கள், அடுத்த போட்டி நடப்பதற்குள் அதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சியில் இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு, அவர்கள் நினைத்தது போல், அவர்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்தார்களா ? இல்லையா ? என்பதை 6 அத்தியாயங்களாக சொல்வதே ‘மம்மட்டியான் பாய்ஸ்’.

கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, சினிமா நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்களை கொண்டாடும் இளைஞர்கள் அவர்களை பின் தொடரலாம், ஆனால் அவர்கள் மீது பித்துப்பிடித்து அலையக்கூடாது, என்ற கருத்தை ஜாலியாக சொல்லியிருக்கும் இந்த தொடரின் திரைக்கதை முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்டிருப்பதோடு, கிரிக்கெட் விளையாட்டின் துள்ளியமான தகவல்கள் மற்றும் கிரிக்கெட் போட்டியை வைத்து நடத்தப்படும் சூதாட்டம் பற்றிய் விவரங்கள் என அனைத்தையும் மிக தெளிவாகவும், உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறது.

தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் உண்மையான நண்பர்கள் போலவே தொடர் முழுவதும் வலம் வருகிறார்கள். உடல் மொழி, உரையாடல்கள், கோபம், சண்டை ஆகியவற்றை மூன்று நண்பர்களும் இயல்பாக கையாண்டு, அந்த அந்த கதாபாத்திரங்களாகவே பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார்கள்.

வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் லாவண்யா அன்பழகன், தற்போதைய காலக்கட்டத்திலும் பெண்கள் தங்களது விருப்பப்படி வாழ முடியாமல், தந்தை, காதலன், கணவன் என்ற வெவ்வேறு பிம்பத்தில் இருக்கும் ஆண்களால் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறார்கள், என்பதை தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி, ஹலோ கந்தசாமி ஆகியோரின் திரை இருப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார் கிராமம் மற்றும் நகரத்தின் வித்தியாசங்களை மட்டும் இன்றி, இரண்டு நிலப்பரப்புகளில் பயணிக்கும் கதாபாத்திரங்களிடமும் வேறுபாட்டை காண்பிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

பரத் தனசேகரின் பின்னணி இசை சாதாரணமாக பயணிக்கும் காட்சிகளை கூட அசாதாரண காட்சிகளாக மாற்றி கவனம் ஈர்க்கிறது. கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு பயணிக்கும் போது பின்னணி இசையிலும் வித்தியாசத்தையும், பல்வேறு பீஜிம்களையும் கையாண்டிருக்கும் பரத் தனசேகர், ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஒவ்வொரு வித்தியாசமான ஓசை மூலம் ஒட்டுமொத்த தொடருக்கும் உயிரூட்டியிருக்கிறார்.

மிக எளிமையான கதை என்றாலும், ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்து என்ன நடக்கும்?, என்ற கேள்வி பார்வையாளர்களிடம் ஏற்படும் வகையில் காட்சிகளை திருப்பங்களோடு தொகுத்திருக்கிறார் பவித்ரன்.கே.

கலை இயக்குநர் பி.தமிழ்செல்வனின் பணியில் செயற்கைத்தனம் இல்லாதது பாராட்டத்தக்கது.

கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கும் சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலைச்செல்வன், வினு கார்த்திகேயன் ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டின் பல விசயங்களை விவரமாகவும், துள்ளியமாகவும் பேசியிருப்பதோடு, இளைஞர்கள் எப்படி சினிமா நட்சத்திரங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்களோ, அதுபோல் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீதும் பைத்தியமாக இருப்பதோடு, அதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ஜாலியாக சொன்னாலும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்.

தொடரை இயக்கியிருக்கும் சவிர் சுதாகர், முதன்மை கதாபாத்திரங்களின் பல்வேறு பயணங்கள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தையும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியோடு சித்தரித்திருப்பது தொடரின் மிகப்பெரிய பலம்.

முதல் மூன்று அத்தியாயங்கள் நண்பர்களது எளிய வாழ்க்கை, அவர்களது ஆசை, கிரிக்கெட் மீதான அவர்களின் அதீத காதல் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது. அடுத்த மூன்று அத்தியாயங்கள் அதே கிரிக்கெட் பின்னணியோடு இருந்தாலும், இதுவரை நாம் பார்த்திராத அல்லது விபரமாக அறிந்திராத கிரிக்கெட் சூதாட்ட உலகத்தை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறது.

ஒரே இடத்தில் பல காட்சிகள் நகர்வது தொடரை சற்று தொய்வடைய செய்வது போல் தோன்றினாலும், அந்த இடத்தில் நாயகனின் காதல், நாயகி எடுக்கும் தைரியமான முடிவு, நண்பர்களுக்கு இடையே ஏற்படும் மோதல், ஆகியவற்றின் மூலம் தொடரை தொய்வில் இருந்து மீட்டெடுக்கும் இயக்குநர் சவிர் சுதாகர், கிரிக்கெட் சூதாட்டத்தின் ஆபத்து மற்றும் அதில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லாமல் போனது முரணாக உள்ளது.

இருப்பினும், எந்த நட்சத்திர வீரருக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் இளைஞர்கள், தங்களது பிரச்சனையின் தீர்வுக்கான பண தேவைக்காக அதே வீரரின் தோல்வியை கொண்டாடும் காட்சி மற்றும் நட்சத்திரங்கள் மீது கண்மூடித்தனமான ஈர்ப்பு கொண்டவர்களுக்கான அறிவுரை, ஆகியவற்றின் மூலம் ஜாலியான பொழுதுபோக்கு தொடராக மட்டும் இன்றி, இப்படிப்பட்ட இளைஞர்களை சற்று யோசிக்க வைக்கும் தொடரகாவும் இயக்கியிருக்கிறார் சவிர் சுதாகர்.

மொத்தத்தில், ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ பிரகாசிக்கும் நட்சத்திரங்களை ரசித்து, தங்களது வாழ்க்கையின் பிராகசத்தை இழக்க வேண்டாம், என்ற அறிவுரையை ஜாலியாக சொல்லியிருக்கிறது.

ரேட்டிங் 3.8/5