Take a fresh look at your lifestyle.

எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகும் க்ரைம் திரில்லர் படம் ‘விடியும் காத்திரு’!

11

இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் பாலா படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர்.அரவிந்த ராஜன், இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ‘விடியும் காத்திரு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியிலான இப்படத்தை பிரண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஹவுஸ் நிறுவனம் சார்பில் பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிக்க, அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் அம்ஜதா ஷெரின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை பெரிதாக்கப்பட்ட கதவு சாவித் துவாரத்தின் வழியே பயத்தில் விரியும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் கவனம் ஈர்க்கிறது. மேலும், கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெற்றிகரமாக திரையரங்கிற்கு கொண்டு வரும் உத்ரா புரொடக்‌ஷன்ஸ் செ.ஹரி உத்ரா ‘விடியும் காத்திரு’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.